
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத்துக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களமிறக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை அண்மையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் சந்தித்து ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் கமலஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய கமல்ஹாசன், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி ஏகமனதாக முடிவு எடுத்துள்ளோம். அவருக்கு வேண்டிய உதவிகளை செய்வோம் என்றும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
18 வயது பூர்த்தி அடைந்த ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் நாளில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு வாக்களித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார்" என்றார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசனின் அறிக்கையை சினேகன் செய்தியாளர்களிடம் வாசித்தார்.