வரதட்சணையை ஆதரிக்கும் செவிலியர் கல்லூரி நூல்!

மருத்துவர் ராமதாஸ் கண்டனம்
வரதட்சணையை ஆதரிக்கும்
செவிலியர் கல்லூரி நூல்!

வரதட்சணையைப் புனிதப்படுத்தும் வகையில் உள்ள செவிலியர் கல்லூரி பாடநூலை உடனடியாக நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று ட்விட்டரில் கூறுகையில், “ செவிலியர் படிப்பிற்கான ‘ Textbook Of Sociology Nurse’ என்ற நூலில் வரதட்சணையைப் புனிதப்படுத்தும் வகையிலான பல கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. டி.கே. இந்திராணி எழுதிய இந்த நூல் நாட்டின் பல செவிலியர் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது.

வரதட்சணை மூலம் கிடைக்கும் பொருட்கள் வீட்டைக் கட்டமைக்க உதவுகின்றன; மகனுக்குக் கிடைக்கும் வரதட்சணையைக் கொண்டு மகளைத் திருமணம் செய்து கொடுக்க முடியும்; வரதட்சணை தான் மகளிர் கல்வியை ஊக்குவிக்கிறது என்பன போன்ற அந்த நூலில் உள்ள கருத்துக்கள் பிற்போக்கானவை.

அசிங்கமானப் பெண்களைக் கவர்ச்சிகரமான வரதட்சணை மூலம் அழகான பையனுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது பெண்களைப் பண்டமாக பார்க்கும் இழி செயலாகும். இந்தக் கருத்துக்கும், செவிலியர் கல்விக்கும் என்ன தொடர்பு?

வரதட்சணை ஆதரவு பிரச்சார அமைப்புகளில் கூட வைக்கத் தகுதியற்ற இந்த நூலை செவிலியர் படிப்புக்கான பாடமாக வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.எனவே, அந்த நூலைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.