சென்னையில் அதிமுகவினர் கலவரம்: வீடியோ பதிவுகளை வைத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 60 பேருக்கு சம்மன்

சென்னையில் அதிமுகவினர் கலவரம்: வீடியோ பதிவுகளை வைத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 60 பேருக்கு சம்மன்

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் அருகே நடைபெற்ற கலவர வழக்கில் வீடியோ பதிவுகளின் அடிப்படையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 60 பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு ராயப்பேட்டை காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் முன் கூடியிருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோரிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது.
இந்தக் கலவரத்தில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவங்களால் காவல்துறையினர் உட்பட 45-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் கலவரத்தில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.

இதனையடுத்து கலவரம் தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது ராயப்பேட்டை காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கலவரத்தில் ஈடுபட்டதாக வீடியோ ஆதரங்களை வைத்து ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 15 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கலவரச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 60 பேருக்கு ராயப்பேட்டை காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். குறிப்பாக கலவரத்தன்று எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை வைத்து தஞ்சை, ஒரத்தநாடு மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுகவினருக்கு நேரில் சென்று காவல் துறையினர் சம்மனை வழங்கியுள்ளனர்.
அதனடிப்படையில் நாளை காலை 11 மணிக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 30பேரும், நாளை மறுநாள் காலை 11 மணிக்கு ஈபிஎஸ் ஆதரவாளர்களும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in