
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் மருத்துவ சர்டிபிகேட் குறித்து டாக்டரும், அரசியல் விமர்சகருமான சுமந்த் சி.ராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக, அதிமுக கூட்டணி மோதலின் விளைவாக அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டதால் அவரது நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இரண்டு நாட்கள் மட்டும் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் அது தற்போது 2 வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில் ," மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணம் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16- ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது உடல் நலம் குறித்த மருத்துவ அறிக்கையை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அதில், " சுவாசிப்பதில் சிரமம், தொண்டை வலி, உடல் வலி மற்றும் சோர்வு போன்ற புகார்களுடன் 3 அக்டோபர் 2023 அன்று மாலை க்ளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டிக்கு அண்ணாமலை வந்தார். நுரையீரல் நிபுணரால் அவர் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டார் .
சி.டி ஸ்கேன் இடது நுரையீரலின் அடித்தளப் பகுதியில் சளி முடிச்சுகள் இருப்பதை காட்டியது. இது மூச்சுக்குழாய் அழற்சியுடன் கூடிய வைரஸ் சுவாசக் குழாய் தொற்று ஆகும். அவருக்கு சில மருந்துகள் கொடுக்கப்பட்டு, அவரின் உடல்நிலை சீரான பிறகு வீட்டுக்குத் திரும்ப அனுப்பப்பட்டார். அவருக்கு 5 நாட்களுக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, 5 நாட்கள் முடிவில் ஆய்வுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அவர் குணமடைய இரண்டு வாரங்களுக்கு படுக்கை ஓய்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டாக்டரும், அரசியல் விமர்சகருமான சுமந்த் சி.ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், " அண்ணாமலை விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன், ஆனால், ஒரு மருத்துவராக நான் இப்படி ஒரு சுவாசக்குழாய் தொற்றை கேள்வி பட்டதே இல்லை. இதுபோன்ற தொற்றுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். அனுமதிக்கப்படாமல் 2 வாரங்கள் படுக்கை ஓய்வு பற்றி கேள்விப்பட்டதே இல்லை.
இந்த மருத்துவச் சான்றிதழ் யாத்திரையை ஒத்தி வைப்பதற்கானது என்பது தெளிவாகிறது. இந்தச் சான்றிதழில் எந்த மருத்துவரும் தன் பெயரைப் போட விரும்பவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. அப்போதே இது பற்றி தெரிகிறது . மருத்துவத் துறை ஒரு கேலிக்கூத்தாக மாறி வருவது வருத்தமளிக்கிறது" என்று விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!
ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!
அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!
ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்