ஓபிஎஸ் ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி! ஜெயலலிதா நினைவிடத்தில் தொடரும் பதற்றம்!

ஓபிஎஸ் ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி! ஜெயலலிதா நினைவிடத்தில் தொடரும் பதற்றம்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாளை நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் இயற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். அதற்கான முன்னேற்பாடுகளை தங்களின் ஆதரவாளர்கள் மூலம் செய்துவருகிறார். இதனிடையே ஒற்றை தலைமை கூடாது என ஓபிஎஸ் தெரிவித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இரு தரப்பிலும் தொடர் சந்திப்புகள், சமாதான தூது என தினந்தினம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், ஈபிஎஸ் தரப்பில் சென்னை வானகரத்தில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஈபிஎஸ் தரப்பில் மனு கொடுக்கப்பட்டது. அதே போல் ஓபிஎஸ் தரப்பிலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் பொதுக்குழுவிற்கு அனுமதி வழங்கக் கூடாது என ஆவடி ஆணையரகத்தில் மனு அளிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் இருக்கும் நிலையில், இருதரப்பிலும் அடுத்த கட்ட நகர்வுகளைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

இந்தநிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று இரவு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குவிந்தனர். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர், தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் அவரை மீட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். ‘ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர். ஒற்றை தலைமை கூடாது' என மெரினா கடற்கரையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in