வயநாடு அலுவலகம் சூறையாட்டப்பட்டதில் திடீர் திருப்பம்: ராகுல் காந்தியின் உதவியாளர் உள்பட 4 காங்கிரஸார் சிக்கினர்

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கேரள மாநிலம் வயநாட்டில் அமைந்துள்ள ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி சூறையாடப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் எஸ்.எப்.ஐ அமைப்பினர் மீது காங்கிரஸார் குற்றம்சாட்டினர். இவ்விவகாரத்தில் திடீர் திருப்பமாக காங்கிரஸ்காரர்களே நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அலுவலகத்தின் சுற்றுச்சுவர் மீது எறிக் குதித்து வயநாட்டில் உள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் அலுவலகத்தில் புகுந்த கும்பல் கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் அடித்து உடைத்து சூறையாடியது. அங்கிருந்த மகாத்மா காந்தியின் படமும் சேதப்படுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தான் ராகுல் காந்தியின் அலுவலகத்தை சூறையாடியதாக இளைஞர் காங்கிரஸார் குற்றம்சாட்டி வந்தனர்.

அதேகாலக்கட்டத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. இதில் பல இடங்களில் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் தொண்டர்களிடையே மோதலும் வெடித்தது. இந்த சூழலில் ராகுல் காந்தியின் அலுவலகமும் சூறையாடப்பட்டிருந்தது. இதனால் காங்கிரஸின் குற்றச்சாட்டு மக்கள் மத்தியிலும் நன்கு எடுபட்டது. இந்த சம்பவத்தின் மறுநாளே கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலக வாசலிலும் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந்நிலையில் ராகுல்காந்தியின் வயநாடு அலுவலகத்தைச் சூறையாடிய விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அலுவலகத்தை தாக்கிய ராகுல்காந்தியின் வயநாடு அலுவலகத்தில் அவருக்கு உதவியாளராக இருக்கும் கே.ஆர்.ரதீஸ், எஸ்.ஆர்.ராகுல், முஜீத், நவ்ஷாத் ஆகிய நான்கு காங்கிரஸாரே கைதுசெய்யப்பட்டு உள்ளனர். இதில் இருவர் அதே அலுவலகத்தில் பணிசெய்யும் ஊழியர்கள் ஆவார். பப்ளிசிட்டிக்காக இவர்கள் இப்படிச் செய்திருப்பதாகவும், இவர்கள் தான் இதைச் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாலேயே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in