கபாலீஸ்வரர் கோயிலில் அத்துமீறி போராட்டம்: பாஜக கவுன்சிலர் உள்பட 75 பேர் பாய்ந்தது வழக்கு

கபாலீஸ்வரர் கோயிலில் அத்துமீறி போராட்டம்: பாஜக கவுன்சிலர் உள்பட 75 பேர் பாய்ந்தது வழக்கு

கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என கூறி கோயில் உள்ளே சட்டவிரோதமாக போராட்டம் நடத்திய பாஜக கவுன்சிலர், வழக்கறிஞர் உட்பட 75 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக செய்தி வெளியிட்டது. இந்நிலையில் கடந்த 31-ம் தேதி மாலை விநாயகர் சதூர்த்தியன்று பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெங்கடேஷ், இந்து தமிழர் கட்சியின் தலைவர் ரவி உட்பட 75க்கும் மேற்பட்டோர் கபாலீஸ்வரர் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் கோயில் நான்காவது வாயிலின் கதவை மூடி திடீரென நவராத்திரி மண்டபத்தில் அனைவரும் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக அறநிலையத்துறை நடவடிக்கைகளை கண்டித்தும், கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்கும் கூட்டம் நடத்தினர். நீண்ட நேரமாக இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் பலர் வெளியே காத்திருக்கும் நிலை ஏற்பட்டதை அடுத்து கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கோயில் அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் மயிலாப்பூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கலைந்து செல்ல வலியுறுத்தியதால் அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரையும் போலீஸார் சமாதானம் செய்து வெளியே அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக கோயிலுக்குள் கூட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் காவேரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெங்கடேஷ், இந்து தமிழர் கட்சி தலைவர் ரவி உட்பட 75 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அனுமதியின்றி கூட்டம் நடத்துதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வழக்கு தொடர்பாக அனைவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதேபோல் அனைவரும் கோயிலில் ஒன்று கூட வாய்ப்பு உள்ளதால் கோயிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in