திடீர் லிஃப்ட் கோளாறு; சிக்கிக்கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர்: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

லிஃப்ட்டுக்கு வெளியே பரிதவிப்போடு காத்திருக்கும் ஆட்சியர் அலுவலக  ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள்
லிஃப்ட்டுக்கு வெளியே பரிதவிப்போடு காத்திருக்கும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லிஃப்ட் பழுதானதால் அதில் பயணித்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்  சுமார் 15 நிமிடங்கள் லிப்டில் சிக்கியிருக்க நேர்ந்தது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூர் சென்றிருந்தார். முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் நடைபெற்ற,  கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். அதன் பின்னர் முதல் தளத்தில் நடைபெற்ற  மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கூட்டுறவுத்துறை மூலம் வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்காக முதல் தளத்திற்கு செல்ல முயன்றார்.

அங்கிருந்த லிஃப்டில் ஏறிய சிவசங்கர் முதல் தளத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தபோது பழுது ஏற்பட்டு லிஃப்ட் பாதியில் நின்றது. உடனடியாக லிஃப்ட் பராமரிப்பாளரும்,  பழுது நீக்குபவர்களும் அங்கு வந்து லிஃப்ட்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.  இதற்கிடையே அமைச்சர் லிஃப்ட்டில்  சிக்கிக்கொண்ட தகவல் தெரிந்ததும் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  பொதுமக்களும் அமைச்சருடன் வந்தவர்களும், ஆட்சியர் அலுவலக ஊழியர்களும்  செய்வதறியாது திகைத்து நின்றனர்.

அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் சுமார் 15 நிமிடம் போராடி லிஃப்ட்டை மீண்டும் இயக்கி  முதல் தளத்துக்கு கொண்டு வந்தனர்.  இதனால் அங்குள்ளோர் அனைவரும் பதற்றம் குறைந்து நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.  அதன் பின்னர் ஆட்சியர் அறையில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்ட அமைச்சர் சிவசங்கர்,  கூட்டுறவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுய உதவி குழுவினருக்கான கடன் தள்ளுபடி சான்றிதழையும் வழங்கிவிட்டு அடுத்த நிகழ்ச்சிக்கு புறப்பட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in