சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திடீர் ரத்து: மத்திய அரசின் அறிவிப்பால் கொந்தளிக்கும் எம்பி!

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திடீர் ரத்து: மத்திய அரசின் அறிவிப்பால் கொந்தளிக்கும் எம்பி!

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை மத்திய அரசு திடீரென ரத்து செய்துள்ளது. இந்த ரத்து அநீதியும் குரூரமும் கலந்த முடிவு என்றும் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் ஒன்றிய சிறுபான்மைத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணிக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், சிறுபான்மை மாணவர்களுக்கு மெட்ரிக்குக்கு முன்பாக கல்விக்கு உதவித்தொகை (Pre Matric Scholorship) இதுநாள் வரை ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இனி 1 முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் ராணிக்கு இன்று கடிதம் எழுதி உள்ளேன்.

1 முதல் 8-வது வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இனி வழங்கப்படாது என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அதற்கான காரணமாக கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி நடுநிலை கல்வி வரை ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச கட்டாய கல்வி வழங்கப்படுவது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆகவே கல்வி உதவித்தொகை இனி 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு மேற்கண்ட வகுப்புகளுக்கு தரப்பட்டு இருந்த விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக அறிய வருகிறேன். இது சிறுபான்மை சமூகங்களை சார்ந்த ஏழை அடித்தள மக்களுக்கு பலத்த அடியாகும். இந்த திட்டம் மாணவர்கள், பெற்றோர்கள் சொலுத்துகிற கட்டணங்களை மட்டுமே ஈடுகட்டக் கூடியது அல்ல. உங்கள் அமைச்சகத்தின் இணையதளத்திலேயே இந்த திட்டம் பற்றி மிகத் தெளிவான முன்னுரை தரப்பட்டுள்ளது. இதோ அந்த வார்த்தைகள்... மெட்ரிக்குக்கு முந்தைய கல்வி உதவித்தொகை திட்டம் என்பது பள்ளிக் கூடத்திற்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதை ஊக்குவிப்பது ஆகும். அவர்களின் பள்ளி கல்விக்கான நிதிச் சுமையை குறைத்து பள்ளி கல்வியே முடிக்க உதவுவதாகும்.

இது அவர்களுக்கு கல்வி கிடைப்பதை உறுதி செய்து போட்டிமிக்க வேலைச் சந்தையில் சமதள ஆடுகளத்தை உறுதி செய்வதாகும். கல்வி மூலம் அதிகாரப்படுத்தல் என்பது இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று. சிறுபான்மை சமூகங்களின் சமூக பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் சக்தி கொண்டது.."

இது கல்விக் கட்டணத்தை மட்டும் பேசவில்லை. அதன் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது. அதன் நோக்கம் மிக விரிந்தது. இருந்தாலும் உங்கள் முடிவு எண்ணங்களுக்கு மாறானதாக அமைந்துள்ளது. சிறுபான்மை சமூகங்களை சார்ந்த ஏழை, அடித்தள மாணவர்கள் பொருளியல், சமூக, கல்வி தளங்களில் பின் தங்கியுள்ளனர். அதற்கு சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளும், பாரபட்சங்களும் காரணம். இந்த திட்டங்கள் எல்லாம் அம்மக்களின் வாழ்நிலை குறித்த ஆழமான ஆய்வுகளின் பின்புலத்தில் கொண்டுவரப்பட்டன. சச்சார் குழு அதற்கான ஆதார தரவாக அமைந்தது. கல்விக் கட்டணம் தவிர்த்து பெற்றோர் தங்கள் வருமானத்தில் இருந்து உணவு, போக்குவரத்து, கல்வி சுற்றுலா போன்றவற்றிற்கு செலவிட வேண்டி உள்ளது. இலவச உணவு திட்டங்கள் அரசு பள்ளிகளில் நடைமுறையில் இருந்தாலும் தனியார் பள்ளிகளில் இல்லை. அதுபோல அரசு பள்ளி மாணவர்களின் பிரத்தியேக பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

விளிம்பு நிலை சமூகத்து மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு ஈடு கொடுக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு சமதள ஆடுகளத்தை இந்த சமூகம் தரவில்லை என்பதே உண்மை. இதற்கு அரசுதான் ஆதரவு நல்க வேண்டும். அது அரசின் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதி. ஆகவே கல்வி உரிமைச் சட்டம் 2009ஐ காரணம் காண்பித்து 1 முதல் 8-ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகை திரும்பப் பெறுவது எளிய மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி ஆகும். மேலும் இது கல்வி உரிமைச் சட்டத்தின் இலக்கையை எட்ட விடாமல் தோற்கடிக்க கூடியதுமாகும். எனவே உங்கள் முடிவை மறுபரிசீனை செய்யுங்கள். ஆதார, நடுநிலைக் கல்வி முழுமைக்கும் கல்வி உதவித்தொகைத் திட்டம் தொடர்வதை உறுதி செய்யுங்கள். நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in