“திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்து, உதய சூரியன் சின்னத்தை முடக்க வேண்டும்” தேர்தல் ஆணையத்திற்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்!

“திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்து, உதய சூரியன் சின்னத்தை முடக்க வேண்டும்” தேர்தல் ஆணையத்திற்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்!

பிராமண சமுதாயம் குறித்து இழிவாக பேசிவரும் திமுகவின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்து, அக்கட்சிக்கு வழங்கப்பட்ட உதயசூரியன் சின்னத்தை முடக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

2021 சட்ட மன்ற தேர்தலில் வெற்றிபெற்று தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்தே, அக்கட்சியினர் பிராமணர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்கள் எனச் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து குற்றம் சார்டிவருகிறார். இந்த நிலையில் கடந்த வருடம், தமிழ்நாட்டில் பிராமண சமூகத்தினர் பாதிக்கப்படுவதைத் தடுக்க சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் திமுகவின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தி, ”பெரியார் சொன்னதைப் போலத் தமிழகத்தில் பிராமணர்கள் இனப் படுகொலை செய்ய வேண்டும்” எனச் சர்ச்சையான கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து பாஜகவின் முக்கிய பிரமுகரான சுப்பிரமணியன் சுவாமி, திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில்,,'தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான திமுகவின் செயலாளர் ஒருவர், மக்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள கொள்கைகளை மீறியுள்ளார். பெரியார் சொன்னதைப் போலப் பிராமண சமூகம் இனப்படுகொலை செய்யப்பட வேண்டும் என அவர் கூறியிருக்கிறார். இந்த அச்சுறுத்தல் தமிழ்நாட்டில் உள்ள பிராமண சமூகத்தினரின் அடிப்படை உரிமைகளை நேரடியாகப் பாதிக்கிறது. தேர்தலில் பிராமணர்கள் வாக்களிக்க முடியாதவாறு அச்சுறுத்தப்படுகிறார்கள். இதனால் தேர்தலில் திமுக எளிதில் வெற்றி பெற வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுத்து திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், அவர்களின் உதய சூரியன் சின்னத்தையும் முடக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். முந்தைய காலங்களில் சுப்பிரமணியன் சுவாமியால் தொடரப்பட்ட வழக்குகள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையைக் கிளப்பிய நிலையில், திமுகவிற்கு எதிராக அவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருப்பது மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in