பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு; புதுவையில் பதுங்கிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்: தட்டித் தூக்கிய காவல்துறை!

பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு; புதுவையில் பதுங்கிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்: தட்டித் தூக்கிய காவல்துறை!

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1-ம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலைப்பண்பாட்டு பிரிவின் செயலாளரும், திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் அவர், 'ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்' எனப் பேசினார். இதற்கு திராவிடர் கழகம், காங்கிரஸ் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் குமரன் புகார் அளித்திருந்தார். அதில், “ஏற்கெனவே 2006-ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால் கலவரம் உண்டானது. அந்த சம்பவம் முடிந்து சுமார் 15 ஆண்டுகளான நிலையில் மீண்டும் தற்போது கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கனல் கண்ணன் பேசியது கண்டிக்கத்தக்கது. அதே போல் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கலவரத்தைத் தூண்டும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். இரு மதத்தினரிடையே மோதலை உண்டாக்கும் வகையிலும் கனல் கண்ணன் பேசியுள்ளதால், அவர் மீதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், கனல் கண்ணன் மீது கலகம் செய்யத் தூண்டிவிடுதல், அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கனல் கண்ணன் தலைமறைவானார். அவரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் புதுச்சேரியில் பதுங்கி இருந்த அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in