தடுமாற்றமே உன் பெயர்தான் தமிழக அரசா?

தடுமாற்றமே உன் பெயர்தான் தமிழக அரசா?

திமுக அரசின் ஓராண்டு சாதனையாக பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விளம்பரங்கள் திரும்பிய பக்கமெல்லாம் தெறிக்கின்றன. தமிழகத்தை முன்னேற்றும் வகையிலான பல திட்டங்களை திமுக அரசு முன்னெடுத்திருக்கிறது என்பது உண்மைதான். அந்தவகையில், தடம் மாறாமல் தமிழக அரசு சென்று கொண்டிருப்பதாக சொல்லப்பட்டாலும், நிர்வாக ரீதியாக தடுமாற்றங்களுடனேயே இந்த அரசு பயணிப்பதைப் பல்வேறு செயல்களிலும் காணமுடிகிறது.

பட்டினப்பிரவேச நிகழ்வு...
பட்டினப்பிரவேச நிகழ்வு...

தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்வின்போது ஆதீனத்தை பல்லக்கில் வைத்து தூக்கிச்செல்ல தமிழக அரசு தடை விதித்ததும், எதிர்ப்பு பலமானதும் அந்த தடை விலக்கப் பட்டிருப்பதும் அரசின் தடுமாற்றத்துக்கு அண்மை உதாரணம். “யாருக்கும் அடிபணிந்து போய்விட மாட்டோம்” என்று பேரவையில் ஸ்டாலின் முழங்கிய ஒரு சில நாட்களில் தடை நீக்கப்பட்ட விஷயம் கூட்டணிக் கட்சிகளையே குறைசொல்ல வைத்தன.

இந்த நிலையில், ‘தமிழக அரசு கொள்கையில் தடுமாறாமல் உறுதி காட்டவேண்டும்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கேட்டுக் கொண்டிருக்கிறது. ’பகுத்தறிவு சிந்தனையோடு மதச்சார்பற்ற பண்புகளை அடிப்படையாகக் கொண்ட சட்டத்தின் ஆட்சியை சமூகநீதி பாதையில் நடத்தும் அரசு பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதை நாகரிக சமூகத்தின் அனைத்துப் பகுதியினரும் வரவேற்றனர். இந்நிலையில் அந்தத் தடை விலக்கப்பட்டிருப்பது அரசு கடைப்பிடித்து வரும் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னடைவாகும். இது போன்ற நேர்வுகளில் அரசு கொள்கையில் தடுமாறாமல், உறுதி காட்ட வேண்டும்’ என்று அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கி.வீரமணி
கி.வீரமணி

திக தலைவர் கி.வீரமணியும், " நமக்குள்ள ஆதங்கம் எல்லாம், தி.மு.க. ஆட்சிக்கு இப்படி ஒரு பின்னடைவை, களங்கத்தை, இந்தத் தடுமாற்ற முடிவு உருவாக்கிவிட்டதே என்பதுதான். மக்களாட்சியில் சில முடிவுகளை ஆட்சியாளர்கள் மறுபரிசீலனை செய்வது தவிர்க்க இயலாததுதான். ஆனால், அப்படிப்பட்ட மறுபரிசீலனைகள் அடிப்படை மனித உரிமைகளையும், சமத்துவ நெறிகளையும் பாதிப்பதாக அமைந்து விடக்கூடாது. துணிந்த பின் எண்ணுவது என்பது இழுக்கு. நடக்கக் கூடாதது இப்போது நடந்துவிட்டது. இதனை எதிர்பார்க்கவில்லை" என்று கோபம் காட்டியிருக்கிறார்.

இதேபோல் தான் ஆம்பூர் பிரியாணித் திருவிழாவும். திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மே 13,14,15 தேதிகளில் ஆம்பூர் பிரியாணி திருவிழா நடத்த ஏர்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், “பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இடம்பெறாது” என்று அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்.

இதையடுத்து, பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி ஒதுக்கப்படுவதை ஏற்கமுடியாது என்று விசிக, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தினர், பிஎஸ்பி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாட்டுக்கறி உணவை மறுத்தால் இந்த அநீதியை எதிர்த்து வர்த்தக மையத்திற்கு எதிராக மாட்டுக்கறி பிரியாணியை இலவசமாக விநியோகிக்கப் போவதாக கோட்டாட்சியர் காயத்ரியிடம் அக்கட்சிகள் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது.

இவ்விஷயத்தில் தலையிட்ட இந்துத்துவா அமைப்புகளோ, "நமது பண்பாட்டிற்கு ஒவ்வாத உணவுப் பழக்கத்திற்கு திருவிழா நடத்துவது கண்டிக்கத்தக்கது" என எதிர்ப்புக் காட்டினார்கள். ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெறவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் திட்டமிடப்பட்ட பிரியாணி திருவிழாவுக்கு இப்படி விதவிதமான எதிர்ப்புக்கள் கிளம்பியதால் மழையைக் காரணம் காட்டி திருவிழாவையை ஒத்திவைத்துவிட்டது மாவட்ட நிர்வாகம். சிறு விஷயங்களில் கூட இப்படித்தான் தத்தித் தடுமாடுகிறது தமிழக அரசு.

மக்களின் கலாச்சாரம், பண்பாடு என்ற தொன்றுதொட்ட பழக்க, வழக்கங்களில் அரசாங்கம் தலையிடுகிறபோது இப்படிப்பட்ட தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன. அதற்கு இன்னொரு உதாரணம் தமிழ் புத்தாண்டை தை முதல் தேதிக்கு மாற்றிய முந்தைய திமுக அரசின் முடிவு. இதுபோல் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளிலும் தமிழக அரசு சற்றே தடுமாறத்தான் செய்கிறது.

நடந்து முடிந்த பேரவைக் கூட்டத் தொடரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், “ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்தில் பயணம் செய்ய கட்டணம் இல்லை” என்று அறிவித்தார். ஆனால் அடுத்த இரண்டே நாட்களில் “அவர்களுக்கு இருக்கை தேவையென்றால் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்” என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது. ஐந்து வயதுக் குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொண்டோ, மடியில் வைத்துக் கொண்டோ பயணிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அருகில் உள்ள இருக்கையில்தான் அமர வைக்க முடியும். அப்படி அமர வைக்க வேண்டுமென்றால் கட்டணம் செலுத்த வேண்டும். ஆரவாரமாக ஒரு அறிவிப்பை செய்துவிட்டு அரசின் நிதிச் சுமையை மனதில் வைத்து புதிதாக ஒரு நிபந்தனையை விதித்திருப்பதும் அரசின் தடுமாற்றத்தையே அப்பட்டமாக்குகிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இப்படித்தான், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் உட்பட்ட நகைக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் இப்போது, ஏற்கெனவே கடன் பெற்றவர்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவு வங்கி ஊழியர்களின் குடும்பத்தினர், விவசாயக்கடன் பெற்றிருப்பவர்கள் - இவர்களுக்கெல்லாம் நகைக் கடன் தள்ளுபடி பொருந்தாது என்று நிபந்தனை விதிக்கிறது திமுக அரசு.

குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உரிமைத்தொகையாக 1000 ரூபாய் வழங்கும் விஷயத்தில், “நான் கலைஞரின் மகன், சொன்னதைச் செய்வேன்” என்ற முதல்வரின் வார்த்தைகள்தான் வழக்கில் இருக்கிறதே தவிர, இன்னும் தொகை வழங்கப்படவில்லை. இதற்கும் ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்து பயனாளிகள் எண்ணிக்கையை மிக சொற்பமாக குறைக்கக் கூடும் என்கிறார்கள் அதிகாரிகள். குடும்பத் தலைவர் ஸ்தானத்தில் பெண்கள் இருந்தால் மட்டுமே வழங்கப்படும், சில வகை குடும்ப அட்டைக்கு மட்டுமே வழங்கப்படும் என்றெல்லாம் இப்போதே செய்திகள் சிதறுகின்றன.

பழைய ஓய்வூதியத் திட்டம் விவகாரத்திலும் திமுக அரசுக்கு தருமாற்றம் தான். பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்பது திமுகவின் முக்கியமான வாக்குறுதி. ஆட்சிக்கு வந்த புதிதில், “நிதிச்சுமை சீரான பின்னர் நிச்சயமாக இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும்” என்று சொன்னார்கள். அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் காத்திருந்தார்கள். ஆனால், ஓராண்டு முடிவில், “பழைய ஓய்வூதியத் திட்டம் அதிகம் செலவு பிடிக்கும் என்பதால் அதனை நடைமுறைப்படுத்த முடியாது” என்று கைவிரித்து விட்டார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இதற்கு அரசு ஊழியர்கள் சார்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால், “படிப்படியாக நடைமுறைப் படுத்தப்படும்” என்று சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

இப்படித்தான், “இனி, முகக்கவசம் கட்டாயமில்லை” என்று சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்தார். அதற்கு மறுநாள் அவரே, “முகக்கவசம் கட்டாயம்தான்; ஆனால், அதை அணியாவிட்டால் அபராதம் கட்டாயம் இல்லை” என்றார். இதுவும்கூட நீடிக்கவில்லை. அடுத்த சில நாட்களிலேயே, “அபராதம் கட்டாயம்” என்று அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கல்வித் துறையிலும் இப்படி பல்வேறு முரண்பட்ட அறிவிப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

ஆக, அசுர பலத்துடன் ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்திருந்தாலும் அனைத்துத் தரப்பையும் திருப்திப்படுத்த நினைக்கிறது திமுக அரசு. அதனால் முக்கியமான பல விஷயங்களில் உறுதியான, நிலையான முடிவுகளை எடுக்கமுடியாமல் தடுமாறிக்கொண்டே பயணிக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in