
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் 1,324 பள்ளி மாணவர் விடுதிகள் செயல்படுகின்றன. இங்கெல்லாம் சுமார் 98,579 மாணவ - மாணவிகள் தங்கிப் படிக்கின்றனர். இவர்களுக்காக அரசுகளால் ஒதுக்கப்படும் நிதியானது முறையாக செலவிடப்படுகிறதா என்ற கேள்வி அடிக்கடி எழும். இப்போது அது விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.
ஆதி திராவிடர் விடுதிகளை மேம்படுத்தவும் பராமரிக்கவும் ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் மத்திய அரசின் பங்கும் இருக்கிறது மாநில அரசின் பங்கும் இருக்கிறது. ஆனாலும், பெரும்பாலான விடுதிகளில் அடிப்படை வசதிகள்கூட சரிவர இல்லாத நிலையே நீடிக்கிறது.
பெரும்பாலான விடுதிகளில் முறையான கழிப்பறைகள்கூட இல்லாததால் மாணவிகள்கூட திறந்தவெளியைப் பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது. தலைநகர் சென்னையிலேயே இந்த நிலை என்றால் வெளிமாவட்டங்களைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. சென்னையில் நந்தனம், மயிலாப்பூர், ராயபுரம் உள்ளிட பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை சம்பந்தப்பட்ட அமைச்சர் பெருமக்கள் நேரில் சென்று பார்த்தாலே நாம் சொல்வது எந்தளவுக்கு நிதர்சனம் என்பது புரியும்.
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் தங்கிப் படிக்கும் பிள்ளைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை, சுகாதாரமான உணவு, குடிநீர், நூலகம் உள்ளிட்ட செலவினங்களுக்காக கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்த நிதியானது முறையாக செலவிடப்படவில்லை என்பது காலங் காலங்கமாக சொல்லப்படும் குற்றச்சாட்டு. இதனால், இங்கே தங்கிப்படிக்கும் மாணவர்கள் பல நேரங்களில் வீதிக்கு வந்து போராடும் நிலை தொடர்கிறது. ஆனாலும் அவர்களுக்கு விடிவு பிறக்கவில்லை என்பதுதான் அவலத்திலும் அவலம்.
இது தொடர்பாக அண்மையில் போராட்டத்தில் குதித்த சென்னை காசிமேடு ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களிடம் பேசினோம். ‘’ “இங்கே 180 மாணவர்கள் தங்கியிருக்கோம். ஆனா, எங்களுக்கு இங்கே சுத்தமான கழிப்பறை இல்லை. பாதுகாப்பான குடிநீர், தரமான உணவு என எதுவுமே கிடைப்பதில்லை. இரவு நேரத்தில் விடுதி காப்பாளர் யாரும் இங்கே இருப்பதில்லை. எங்களுக்காக அரசு வழங்கும் உணவுப் பொருட்களை மலிவான விலைக்கு வெளியாட்களுக்கு விற்றுவிடும் கொடுமையும் நடக்குது. இது சம்பந்தமா நாங்க பலமுறை புகார் சொல்லியும் யாரும் நடவடிக்கை எடுக்கல.
அதனால் தான் போராட்டத்தில் ஈடுபட்டோம். குடும்ப வறுமையால் தான் நாங்க இங்கே தங்கிப் படிக்கிறோம். ஆதிதிராவிடர் பிள்ளைகளுக்காக கோடிக் கணக்கில் பணம் ஒதுக்குறதா சொல்றாங்க. எங்களோட விடுதிக்குக் கூட 2 கோடி ஒதுக்கி இருக்கதா போர்டு வெச்சிருக்காங்க. ஆனா, அந்தப் பணத்தை செலவழிச்சதுக்கான அறிகுறியே இல்லை.
நாங்கள் போராட்டம் நடத்தும்போது மட்டும் அதிகாரிகள் வந்து, அனைத்தும் செய்துதரப்படும்னு வாக்குறுதி குடுத்துட்டுப் போறாங்க. ஆனா, அதுக்கப்புறம் யாருமே இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கிறதில்லை. இப்போது அரசு நிர்வாகத்தில் பணியில் இருக்கும் அதிகாரிகளில் சிலர், தாங்கள் எல்லாம் மாணவ பருவத்தில் ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளில் தங்கிப் படிச்சதா சொல்றாங்க. அவங்க எல்லாரும் ஒன்று சேர்ந்து நடவடிக்கையில் இறங்கினாத்தான் எங்க பிரச்சினை தீரும்’’ என்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமறிய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழியை தொடர்பு கொண்டோம். “அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள்” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குநர் அண்ணாதுரையிடம் பேசினோம். “ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளுக்காக அரசு தரப்பிலிருந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். கடந்த நிதியாண்டில், ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் மேம்பாட்டுக்காக தமிழக அரசு 75.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. அந்த நிதியைக் கொண்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் முதலமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், ‘ஆதிதிராவிடர் மாணவர்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான உணவு, அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்தார். அதன்படி ஆதிதிராவிடர் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கான விடுதிகள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் 044-25665566 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதேபோல் மாவட்டங்கள் தோறும் புகார் எண் அளிக்கப்பட்டுள்ளது. அந்த எண்களிலும் புகார் அளிக்கலாம்.
ஆதிதிராவிடர் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் தோறும் அரசு சார்பில் 150 ரூபாய் கைச் செலவுக்காக வழங்கப்படுகிறது. ஆனால், பெரும்பகுதி மாணவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைப்பதில்லை என்பதால் அரசு தரப்பில் பணம் போடப்பட்டதும் அதை வங்கிகள் அபராதத் தொகைக்காக எடுத்துவிடுகின்றன. அதனால் மாதா மாதம் வழங்கப்படும் உதவித் தொகையுடன் சேர்த்து இந்தப் பணத்தையும் இப்போது வழங்கி வருகிறோம்” என்றார் அவர்.
“அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதே தனது அரசின் லட்சியம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி சொல்லி வருகிறார். மற்றவர்களுக்கு எப்படியோ... ஆனால், குடும்ப வறுமையின் காரணமாக அரசு விடுதிகளில் தங்கிப் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அரசால் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும். தரமான கல்வி என்பது படிக்கும் இடத்தில் மட்டுமல்ல... மாணவர் தங்கிப் படிக்கும் விடுதிகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் இருக்கிறது என்பதை அதிகாரிகளுக்கு முதல்வர் தான் உரக்கச் சொல்ல வேண்டும்!