பேரவையிலிருந்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. அதோடு பாஜக உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டார்கள். “தமிழக முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பேட்டியளித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. “தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பிப்பில்லை. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது” என்று வருத்தப்பட்டார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி. இத்தனை அமளிக்கும் காரணம் மயிலாடுதுறைக்கு வந்த தமிழக ஆளுநர் ரவிக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது தான்.
தமிழகம் தாண்டி இந்திய அளவில் மிகப்பெரிய சர்ச்சையையும், கண்டனத்தையும் எழுப்பியிருக்கிறது இந்த விவகாரம். இதற்கு அடிப்படை காரணமாக கூறப்படுவது தருமபுர ஆதீனம் தான். தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்கு நிலவிவரும் நிலையில் ஆளுநரை ஆதீனத்துக்கு அழைத்திருக்க வேண்டாமே என்பதுதான் பொதுவானவர்கள் முன்வைக்கும் கருத்து.
சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட தருமபுரம் ஆதீனத்திற்கென்று தமிழகத்தில் தனிப்பெரும் மரியாதை இருக்கிறது. தமிழகத்தில் உள்ள பிற சைவ மடங்களுக்கு வழிகாட்டும் அளவுக்கு தருமபுரம் ஆதீனமும், திருவாவடுதுறை ஆதீனமும் முன்னணி மடங்களாக விளங்கி வருகின்றன.
தருமபுரம் ஆதீனத்திற்கு செல்வதை அரசியல்வாதிகளும், ஆன்மிக அன்பர்களும் பெரும் பேறாகக் கருதுவார்கள். அப்படித்தான் அரசியல் பிரபலங்கள் பலரும் சென்றிருக் கிறார்கள். தற்போதைய தமிழக அரசின் அமைச்சர்கள், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலரும் அங்கு சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழக ஆளுநர் ரவி அங்கு வருவதற்கு மட்டும் எதிர்ப்பு கிளம்பியது.
மீத்தேன் எதிர்ப்புத் திட்டக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகளும், இடதுசாரிகளும், விசிக உள்ளிட்ட கட்சிகளும் அமைப்புகளும் ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆளுநரை தருமபுரம் ஆதீனத்திற்கு அழைக்க வேண்டாம் என்றும் அவர்கள் வேண்டுகோளும் விடுத்திருந்தனர். ஆனாலும் அதையெல்லாம் மீறி ஆளுநர் வந்ததுதான் பிரச்சினைக்கும், சர்ச்சைக்கும் பிள்ளையார் சுழிபோட்டுவிட்டது.
தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்கெல்லாம் செல்ல வேண்டுமென்பது ஆளுநர் ரவி மற்றும் அவரது மனைவியின் விருப்பமாம். அதன்படி தஞ்சாவூர் வந்தபோது திருக்கடையூர் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருந்தது. ஆனால், அப்போது குடமுழுக்கு பணிகள் நடந்து கொண்டிருந்ததால் அது முடிந்ததும் வரலாம் என்று சொல்லப்பட்டிருந்தது. தற்போது குடமுழுக்கு முடிந்த நிலையில் ஆளுநரின் திருக்கடையூர் பயணத்திட்டம் உறுதியானது.
இந்த நிலையில், ஆளுநர் தங்களது ஆதீனத்துக்கும் வரவேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் ஆளுநரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். தருமபுரம் ஆதீனத்தின் கலைக்கல்லூரி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் அக்கல்லூரியின் பவளவிழா ஆண்டாக இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காக பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டு ஏராளமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதற்காகத்தான் ஆளுநரையும் அழைத்திருந்தார் ஆதீனகர்த்தர்.
ஆளுநரும் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநருக்காக நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. பவள விழா கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா , ஞானயாத்திரை துவக்க விழா ஆகியவை ஆளுநர் வருகையின்போது திட்டமிடப்பட்டது. இதில் கலையரங்கப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன. இருந்தாலும் ஆளுநரை வைத்து தொடங்கியதாக இருக்கட்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் ஆளுநர் வருகை இவ்வளவு பெரிய எதிர்ப்பை கிளப்பும் என்பதை ஆதீனகர்த்தர் எதிர்பார்க்கவில்லை.
இந்த விஷயத்தில் மற்ற மடங்கள் பலத்த அமைதிகாக்கும் நிலையில் அவர்களிடம் இதுகுறித்து கேட்டால் பேசவும் மறுக்கிறார்கள். மடம் சார்ந்த பிரமுகர்கள் மட்டும் பேரைச்சொல்லாமல் பேசினார்கள்.
’’பொதுவாக தமிழ்நாட்டில் ஆன்மிகவாதிகள் மத்தியில் பாஜக ஆதரவு மனநிலையில் ஒரு பிரிவும், திமுக ஆதரவு மனநிலையில் இன்னொரு பிரிவினரும் இருக்கிறார்கள். ஆதீனகர்த்தர்களும் அவ்வாறே பிரிந்திருக்கின்றனர். தற்போதைய மதுரை ஆதீனம் போன்றவர்கள் பாஜக மனநிலையிலும், குன்றக்குடி ஆதீனம் உள்ளிட்டவர்கள் திமுக ஆதரவு மனநிலையிலும் இருக்கிறார்கள். தருமபுரம் ஆதீனம் தற்போது பாஜக ஆதரவு மனநிலையில் இருப்பதாகவே தெரிகிறது. அதற்குக் காரணமும் இருக்கிறது.
அண்மையில் அறநிலையத்துறை சார்பில் ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டபோது அதில் மடாதிபதிகள் சார்பில் திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம் உள்ளிட்ட பலரையும் இணைத்த திமுக அரசு, மிகப்பெரிய ஆதீனமான தருமபுரம் ஆதீனத்தைச் சேர்க்கவில்லை. அந்த குழுவில் தன்னை இணைக்கவில்லை என்பதில் தருமபுரம் ஆதீனத்திற்கு வருத்தம் இருந்துவந்தது. இந்த நிலையில் தான் ஆளுநரை மடத்திற்கு வரவழைத்தார் தருமபுரம் ஆதீனம்” என்று பின்னணியை விவரித்தார்கள்.
அதேசமயம், ’’அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதலில் ஆன்மிகவாதிகள் சம்பந்தப்பட வேண்டியது இல்லை. அவர்களுக்குள் அதிகாரப் போக்கு நிலவி வருகிறது. அதை அவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். நம்முடைய வேலை அதுவல்ல, ஆன்மிக விஷயங்களில் மட்டுமே நாம் தலையிட வேண்டும். முந்தைய மதுரை ஆதீனமும், காஞ்சி சங்கர மடமும் தான் எப்போதும் நேரடி அரசியலில் தொடர்பில் இருப்பார்கள். மற்றவர்கள் யாரும் அரசியலுக்குள் நேரடியாகச் செல்ல மாட்டார்கள். தருமபுரம் ஆதீனம் இந்த நேரத்தில் ஆளுநரை அழைத்தது நேரடி அரசியலில் ஈடுபடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த காரியத்தை இப்போது செய்திருக்க வேண்டியதில்லை” என்கிறார்கள் இன்னும் பிற மடங்களைச் சேர்ந்தவர்கள்.
சமூக அக்கறை கொண்டவராக விளங்கும் ஆதீனகர்த்தர், மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கு இடம் கொடுத்திருக்கிறார். மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தேர்வாகியுள்ள இடமும் ஆதீனத்திற்கு சொந்தமானதுதான். இப்படி அரசுக்கு தங்கள் பங்களிப்பை செய்து வந்தாலும் தன்னுடைய வருத்தத்தை வெளிக்காட்டும் வகையில் ஆளுநரையும் வரவைத்திருக்கிறார் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
ஆளுநரின் வருகை ஆதீனத்துக்கு பெருமை என்று நினைத்து தருமபுரம் ஆதீனம் இதைச் செய்திருக்கிறார். ஆளுநருக்கு எதிரான எதிர்ப்பை தெரிவிக்க இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன திமுகவுக்கு ஆதரவான தோழமைக் கட்சிகள்.
“தமிழக மக்களையும், தமிழக அரசையும், தமிழக சட்டமன்றத்தையும் மதிக்காதவர், இந்திய அரசியல் சாசனத்தை மீறிநடப்பவர், தமிழகத்தின் மீது அக்கறை இல்லாதவர். ஒரே தேசம், ஒரே மொழி என்ற கொள்கையை வைத்திருப்பவர், தீவிர இந்துத்துவா கொள்கையை கடைபிடிப்பவர் தற்போதைய ஆளுநர். அப்படிப்பட்டவரை பாரம்பரியம் மிக்கதும், தமிழையும், சைவத்தையும் போற்றி நிற்கும் மடமுமான தருமபுரம் மடத்திற்கு அழைத்திருக்கக்கூடாது.
மக்கள் நலன் மீது அக்கறை உள்ள தருமபுரம் ஆதீனம் இதைச் செய்திருக்கக்கூடாது. அதில் எங்களைப் போன்றவர்களுக்கு உடன்பாடில்லை. அதனால் தான் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக்கொடி காட்டினோம். இதில் எங்களுக்கு ஆதீனத்தின் மேல் வருத்தம்தானே தவிர கோபமில்லை. கோபமெல்லாம் ஆளுநர் மீதுதான்” என்கிறார் கருப்புக்கொடி காட்டிய வழக்கில் சிக்கியிருக்கும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்.
இதுகுறித்து ஆதீன மடத்தின் சார்பில் ஆதீன கல்லூரியின் செயலாளர் செல்வநாயகத்திடம் பேசினோம். ‘’இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட ஆளுநர்கள் இந்த மடத்துக்கு வருகை தந்திருக்கிறார்கள். இந்தியாவின் குடியரசுத் தலைவர் வந்திருக்கிறார். பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி உள்ளிட்டவர்கள் வந்திருக்கிறார்கள். தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி 1972-ல் எங்கள் மடத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருக்கிறார். ‘நான் முதல்வராக வரவில்லை இந்த மடத்தின் ஊழியரின் மகனாக வந்திருக்கிறேன்’ என்று அப்போது அவர் பெருமிதம் கொண்டார்.
ஆதீனக் கல்லூரியின் பவள விழா ஆண்டு என்பதால் ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழக அரசின் அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர் ராமலிங்கம், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டவர்கள் ஆதீனத்திற்கு வந்து இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாதம் அமைச்சர் தங்கம் தென்னரசு வர இசைந்திருக்கிறார். அப்படித்தான் ஆளுநரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆளுநரிடம் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பே தேதி வாங்கப்பட்டுவிட்டது. மற்றபடி இதில் வேறு எந்தவிதமான பின்புலமும் இல்லை. தமிழக அரசுக்கு எதிராக நடக்க வேண்டிய அவசியமும் மடத்திற்கு இல்லை.
ஆளுநர் வருகைக்கு முன்பே தமிழக அரசுக்கு இந்த நிகழ்ச்சி பற்றிய முழு விவரத்தையும் தெரிவித்து விட்டோம். அதேபோல நிகழ்ச்சி முடிந்ததும் எல்லா விவரங்களையும் கூறிவிட்டோம். அதனால் தமிழக முதல்வர் இதில் எங்கள் நிலைப்பாட்டை முழுமையாக புரிந்து கொண்டுவிட்டார். அதன் வெளிப்பாடாகத்தான் எங்கள் ஆதீனகர்த்தர் மேற்கொண்டிருக்கும் ஞானரத யாத்திரையை சென்னையில் ஏப்ரல் 27- ம் தேதி வரவேற்க அவர் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தால் மடத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. அப்படி எதுவும் வந்தாலும் அதை சமாளித்துக் கொள்வதற்கும் எங்களுக்கு தெரியும். அதிமுகவோ, திமுகவோ, ஆளுநரோ, முதல்வரோ அனைவரையும் சமமாக கருதுவதுதான் எங்கள் ஆதீனகர்த்தரின் நிலைப்பாடு” என்று விரிவாக விளக்கமளித்தார் செல்வநாயகம்.
ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், சட்டப் பேரவைத் தீர்மானத்தை உதாசீனப்படுத்தி, ஆளும் கட்சியுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வரும் ஆளுநரை ஆதீன விழாவுக்கு அழைத்து சர்ச்சையில் சிக்கியிருக்கத் தேவையில்லை என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.