ஜெயலலிதா உயிலை வெளியிடக்கோரி போராட்டம்: அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு

ஜெயலலிதா உயிலை  வெளியிடக்கோரி போராட்டம்: அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சவுந்தரராஜன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, தன்னை அழைத்து திருவேற்காடு, மாங்காடு, கரையாஞ்சாவடி, கோயம்பேடு பகுதிகளில் உள்ள நிலங்களில் வில்லாக்கள் ஏற்படுத்தும்படி கூறியதாகவும், அதன் அடிப்படையில் வில்லாக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து, 125 வில்லாக்களுக்கு முன் பணமாக 30 லட்சம் ரூபாய் வசூலித்து கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

இந்த விவரங்கள் சசிகலாவுக்கும், ஜெயலலிதாவின் உதவியாளரான ரமேஷ் என்பவருக்கும் தெரியும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின், பெங்களூரு சென்ற வழியில் தன்னைச் சந்தித்த சசிகலா, சில சொத்துக்களை தனது பெயருக்கு ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளதாகக் கூறியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா தற்போது தன்னை சந்திக்க மறுப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உயிலை வெளியிடக் கோரி பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது சமாதியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கோரி காவல் துறைக்கு மனு அளித்ததாகவும், அந்த மனுவை பரிசீலித்து அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி மனுதாரர் விண்ணப்பித்துள்ளாரா என்பதை அறிந்து தெரிவிக்கும்படி காவல் துறை தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்.12-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in