வேண்டும் வேண்டும்... ஒற்றைத் தலைமை வேண்டும்! - அதிமுக பொதுக்குழுவில் அடங்காத முழக்கம்

வேண்டும் வேண்டும்... ஒற்றைத் தலைமை வேண்டும்! - 
அதிமுக பொதுக்குழுவில் அடங்காத முழக்கம்

அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் உள்ளே நுழைந்ததுமே அரங்கத்தின் உள்ளே இருந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, "வேண்டும் வேண்டும்... ஒற்றைத் தலைமை வேண்டும்” என இடைவிடாது முழக்கம் எழுப்பினர்.

ஒற்றைத் தலைமை குறித்து எதிர்க் குரல் எழுப்பிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்றைய பொதுக்குழுவுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், ஒரு வழியாகப் பொதுக்குழு நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தை வந்து அடைந்திருக்கிறார் ஓபிஎஸ்.

ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்பதற்காக நீதிமன்றம் சென்று, இரவு முழுக்க சட்டப் போராட்டத்தை நடத்தி, ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்பதற்கான உத்தரவை உயர் நீதிமன்றத்தில் வாங்கினார் ஓபிஎஸ். “தீர்மானங்களை விவாதிக்கலாம், ஆனால், முடிவெடுக்கக் கூடாது” என்ற நீதிமன்ற உத்தரவை நம்பி, ஓபிஎஸ் பொதுக் குழுவுக்கு கிளம்பினார். ஆனால், ஈபிஎஸ்சுக்கு வழிநெடுக பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது போல ஓபிஎஸ்சுக்கு அவ்வளவு ஆதரவும், வரவேற்பும் கிடைக்கவில்லை.

காலை 10.40 மணியளவில் பொதுக்குழு நடைபெறும் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தை ஓபிஎஸ் வந்தடைந்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள் அவரது வாகனத்தை சூழ்ந்து கொண்டு, “ஈபிஎஸ் வாழ்க” என்று முழக்கமிட்டனர். “ஓபிஎஸ் வாழ்க” முழக்கமும் சன்னமாக எங்கோ ஒலித்தது. பொதுக்குழு நடைபெறும் இடம் வந்ததும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது வாகனத்துக்கு முன்னாள் பெரும் திரளாக திரண்டு மற்றவர்களை அருகில் நெருங்க விடாமல் வாகனத்தை அழைத்துச் சென்றனர்.

ஈபிஎஸ் ஆதரவாளர்களால் ஏதும் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனக் கருதிய போலீஸார், அவரை பாதுகாப்புடன் உள்ளே அழைத்துச் சென்றனர். அவர் உள்ளே வந்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து மண்டபத்தின் உள்ளே இருந்த தொண்டர்கள் “வேண்டும் வேண்டும்... ஒற்றைத் தலைமை வேண்டும்” என்று தொடர்ந்து முழக்கமிட்டனர்.

முன்னதாக, வெல்லமண்டி நடராஜன் வைத்திலிங்கம் ஆகியோர் உள்ளே வரும்போதும் இதேபோல ஈபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ்சுக்கு எதிராகவும், ஈபிஎஸ்சுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர். “வைத்திலிங்கம் ஒரு துரோகி” என பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் குரல் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து மேடையில் அமராமல் அவர் கீழே இறங்கினார்.

இந்த நிலையில், மண்டபத்தின் வாயிலில் வாகனத்தை விட்டு இறங்கிய ஓபிஎஸ் உள்ளே சென்றதும், ஈபிஎஸ் வாகனம் வந்து கொண்டிருப்பதால் உடனே ஓபிஎஸ் வாகனத்தை அங்கிருந்து எடுக்க வேண்டும் என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் குரல் கொடுத்தனர். அதனால் ஓபிஎஸ் வாகனம் அங்கிருந்து உடனடியாக எடுத்துச் செல்லப்பட்டது. தலைமை கழகம் சார்பில் ஓபிஎஸ்சுக்கு எவ்வித வரவேற்பும் அளிக்கப்படவில்லை. அங்கிருந்த பெரும்பாலான தொண்டர்கள் ஓபிஎஸ்சுக்கு எதிரான மனநிலையில் இருந்ததையும் பார்க்க முடிந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in