கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

``தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்கள் மட்டுமே தொழிற்பயிற்சி மைய ஆசிரியர்களாக பணி மாற்றம் செய்யப்படுகின்றனர். கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளியில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தனியார் அமைப்புகள் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான புதிய சிந்தனையை தூண்டும் வகையில் நடத்திய போட்டியில் முதல் 30 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றளிக்கும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ``தேவைக்கு அதிகமாக உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களை மட்டுமே தொழிற்பயிற்சி மைய ஆசிரியர்களாக பணி மாற்றப்பட்டு வருகிறார்கள். கூடுதல் ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் இருந்து மாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளோம்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அரசு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு விவரங்களை பதிவேற்றும் நிதித்துறையின் வலைதளத்தில் பிரச்சினை உள்ளது என்ற தகவலை சம்மந்தப்பட்ட துறைக்கு தெரிவித்து தற்போது வழக்கம் போல் தளம் இயங்குகிறது. ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லாமல் வழக்கம் போல் சம்பளம் கிடைக்கும்.

கல்வி உரிமை சட்டம் (Right To Education)  படி தனியார் பள்ளியில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதியை மீறி கட்டணம் வசூலித்தாலோ அல்லது கூடுதல்கள் கட்டணம் வசூலித்தாலோ அரசிற்கு தகவல் தெரிவிக்கலாம். விதிமீறல் ஈடுபடும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இலவச மடிக்கணினி திட்டத்தில் இதுவரை 11 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டியுள்ளது. மடிக்கணினி தேவையான சிப் தற்போது சந்தையில் தேவையான அளவில் இல்லை என்பதால் விரைவில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்'' என தெரிவித்தார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in