`சட்டத்துக்கு புறம்பாக பட்டாசு ஆலை இயக்கினால் கடும் நடவடிக்கை'- எச்சரிக்கும் அமைச்சர்

`சட்டத்துக்கு புறம்பாக பட்டாசு ஆலை இயக்கினால் கடும் நடவடிக்கை'- எச்சரிக்கும் அமைச்சர்

பட்டாசு தொழிலையும் பாதுகாக்க வேண்டியும் உள்ளது என்றும் சட்டத்துக்கு புறம்பாக பட்டாசு ஆலை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நிகழ்த்த பட்டாசு வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பட்டாசு ஆலைகளை கண்காணிக்க தனியாக ஒரு குழு அமைத்து கண்காணித்து வருகிறோம். இதனையும் மீறி சில சம்பவங்கள் இதுபோன்று நடக்கிறது.

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் மதுரை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு வெடி விபத்து தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தி உள்ளேன். நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் இதுபோன்ற விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு எச்சரிக்கையுடன் இருக்கிறார். கூடுதலாக கண்காணிக்க தனி குழு அமைக்கப்படும்.

உரிமம் ஒருவர் பெயரில் எடுத்துக் கொண்டு மற்றொருவர் பட்டாசு ஆலை நடத்தினால் அது சட்டப்படி தவறு. அவரது உரிமம் ரத்து செய்யப்படும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு தொழிலையும் பாதுகாக்க வேண்டியும் உள்ளது. பட்டாசு விபத்துகளை தடுக்க வேண்டியும் உள்ளது. சட்டத்துக்கு புறம்பாக பட்டாசு ஆலை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in