ஆட்டோ டிரைவரில் தொடங்கி அரியணை வரை! - ஏக்நாத் ஷிண்டேயின் எழுச்சிக்கதை

ஆட்டோ டிரைவரில் தொடங்கி அரியணை வரை! -  ஏக்நாத் ஷிண்டேயின் எழுச்சிக்கதை

மகாராஷ்ட்டிர முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே 11-ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை கைவிட்டு ஆட்டோ ஓட்டுநராக தனது வாழ்க்கை பயணத்தைத் தொடங்கியவர். தற்போது இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் மாநிலமான மகாராஷ்ட்டிராவின் முதல்வராகி உள்ளார்.

நேற்றிரவு, மகாராஷ்ட்டிர முதல்வராக சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவின் பெயரைச் சொல்லி பதவியேற்றுக்கொண்ட ஏக்நாத் ஷிண்டே, தற்போது ட்விட்டர் முகப்பில் தாக்கரேயுடன் தான் இருக்கும் படத்தை வைத்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் பால் தாக்கரேவின் இந்துத்துவா சித்தாந்தத்தை உத்தவ் தாக்கரே நீர்த்துப்போகச் செய்ததாக கடந்த 10 நாட்களாகவே ஏக்நாத் ஷிண்டே குற்றம்சாட்டி வந்தார். உத்தவ் தாக்கரே பால்தாக்கரேவின் கொள்கைகளுக்கு துரோகம் செய்வதாகவும், தாங்கள்தான் பால்தாக்கரேவின் வாரிசுகள் என்றும் அனலையும் கிளப்பி வருகிறார்.

சிவசேனாவுக்குள் வெடித்த பூகம்பம்:

கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால் பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என கருதப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தங்களுக்கு ஆட்சியில் இரண்டரை ஆண்டுகள் பங்கு வேண்டும் என சிவசேனா போர்க்கொடி தூக்கியது. இதற்கு பாஜக உடன்படாத காரணத்தால், தடாலடியாக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தார் உத்தவ் தாக்கரே.

உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் அவரது மகன் ஆதித்ய தாக்கரேவும் அமைச்சராக பதவியேற்றார். இதில் ஏக்நாத் ஷிண்டே உட்பட பல சீனியர் அமைச்சர்கள் அப்செட் ஆனார்கள். அதன்பின்னர் கட்சி, ஆட்சி என அனைத்துலும் ஆதித்ய தாக்கரே தலையிட ஆரம்பித்ததால் அதிருப்தியாளர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றனர். மேலும், என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் சிவசேனா எம்எல்ஏ-க்களுக்கு குடைச்சல் கொடுத்து வந்தனர். இதனை எல்லாம் முறையிடலாம் என நினைத்தால் உத்தவ் தாக்கரே இவர்களைச் சந்திப்பதையே தவிர்த்து வந்தார்.

இவையெல்லாம் உள்ளே கனன்று கொண்டிருந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலின்போது பாஜக தலைவர்கள் சிலர் ஏக்நாத் ஷிண்டேயிடம் பேசத்தொடங்கியதும் அவர்களுக்குள் புதிய திட்டம் முளைத்தது. அதனைத் தொடர்ந்து மாநிலங்களவை தேர்தலில் சிவசேனா வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு பாஜக வேட்பாளர் வென்றார். இதன் பின்னர் ஜூன் 20-ல் சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.

யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?

58 வயதான ஏக்நாத் ஷிண்டே 11-ம் வகுப்பு வரை படித்துள்ளார், படிப்பை நிறுத்தியவுடன் குடும்பச் சூழல் காரணமாக, தானே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்தார். பின்னர் பால் தாக்கரேயின் மண்ணின் மைந்தர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தீவிர சிவசேனா தொண்டரானார். தானே பகுதியின் பலம்மிக்க தலைவரான ஆனந்த் திகேவின் நம்பிக்கைக்கு உரிவராக மாறிய ஷிண்டே, 1997-ல் முதன்முறையாக தானே மாநகராட்சி உறுப்பினராக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இதையடுத்து பால் தாக்கரேயின் நம்பிக்கைக்கு உரியவராக மாறிய ஷிண்டேவுக்கு 2004-ல் எம்எல்ஏ சீட் தரப்பட்டது. எம்எல்ஏ ஆனதும் உத்தவ் தாக்கரேயின் அபிமானத்துக்கு உரியவராகவும் மாறினார் ஷிண்டே. 2014-ல் அமைந்த பாஜக - சிவசேனா கூட்டணி அமைச்சரவையில் பொதுப்பணி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக ஆனார் ஷிண்டே.

கடந்த 2019-ல் பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து மகா விகாஸ் அகாடி அரசு அமைந்தபோது முதலில் ஏக்நாத் ஷிண்டேதான் முதல்வர் என பேச்சு எழுந்தது. ஆனால், கூட்டணி தலைவர்களின் விருப்பத்தினால் உத்தவ் தாக்கரே முதல்வர் ஆனார். அதன் பின்னர் ஆதித்ய தாக்கரேவின் வருகையால், தான் ஓரங்கட்டப்படுவதாக விரக்தியில் இருந்த ஷிண்டே, தற்போது உத்தவ் தாக்கரேக்கு எதிராக போர்க்கொடித் தூக்கி அரியணையை பிடித்துள்ளார். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வாரிசு அரசியலால் விரக்தி அடைந்ததாகக் கூறும் ஏக்நாத் ஷிண்டே, தனது மகனை கல்யாண் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கியிருக்கிறார்.

உத்தவ் தாக்கரேக்கு எதிராக செயல்பட தொடங்கியதிலிருந்து பால்தாக்கரேயின் பெயரை உயர்த்திப் பிடிக்கும் ஏக்நாத் ஷிண்டே, தற்போது சிவசேனாவொன் பெரும்பான்மை எம்எல்ஏ-க்கள் தன்னிடம் உள்ளதால் சிவசேனா கட்சியையும் கைப்பற்றும் முயற்சியை தொடங்கியுள்ளார். அதற்காக, இந்துத்துவா கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என 'பால்தாக்கரே அரசியலையும்' கையில் எடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in