'உங்க நாடகத்தை நிறுத்துங்க': அதிமுக எம்எல்ஏவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய மக்கள்

'உங்க நாடகத்தை நிறுத்துங்க': அதிமுக எம்எல்ஏவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய மக்கள்

அம்பாசமுத்திரம் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவின் பெயரைக் குறிப்பிட்டு ‘உங்க நாடகத்தை நிறுத்துங்க எம்எல்ஏ!”என பொதுமக்கள் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாசமுத்திரம் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் இசக்கி சுப்பையா. கடந்த 2011-ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வென்ற இசக்கி சுப்பையா, ஜெயலலிதா அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சர் ஆனார். ஆனால் சிலமாதங்களிலேயே அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவருக்கு சொந்தமாக ரிசார்ட் உள்பட பல தொழில்களும் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தவருக்கு கடந்த சட்டசபைத் தேர்தலில் அம்பை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. வெற்றிபெற்று இசக்கி சுப்பையா எம்எல்ஏவும் ஆனார்.

வெற்றிபெற்ற பின்பு அவ்வப்போது மட்டுமே தொகுதிக்குள் தலைகாட்டுவதாகவும், பெரும்பாலான நாள்கள் சென்னையிலேயே அவர் முகாமிட்டு இருப்பதாகவும் தொகுதிக்குள் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், அம்பாசமுத்திரம் - திருநெல்வேலி சாலையை சீரமைக்கும் பணியை முந்தைய அதிமுக ஆட்சியிலேயே அதிமுக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுத்துவிட்டு இப்போது சாலைப்பணி மெதுவாக நடப்பதாக நாடகம் போடுவதாகவும் எம்எல்ஏவைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ’சேரன்மகாதேவி ஊர் பொதுமக்கள்’ என்னும் பெயரில் அம்பாசமுத்திரம் தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தரப்பினரோ, “எம்எல்ஏ உள்ளூரில் இருந்தாலும், வெளியூரில் இருந்தாலும் தினமும் எம்எல்ஏ அலுவலகம் திறந்து செயல்படுகிறது. அண்மையில் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் பத்து முக்கியப் பிரச்சினைகளைக் கேட்டனர். அதில்கூட அம்பை-நெல்லை சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அரசியலில் பிடிக்காதவர்கள் கிளப்பிவிடும் சதி இது ”என்று முடித்துக்கொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in