
இபிஎஸ் பிரதமர் வேட்பாளரா? என்ற கேள்விக்கு சிரிப்பையே பதிலாக அளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’தமிழக ஆளுநர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது. தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்களை ஒவ்வொரு ஜாதி கட்சியும் வைத்துள்ளன. எத்தனை சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன? ஆளுநரின் கேள்வி நியாயம் தானே.
அதற்காக அவரை ஒருமையில் பேசலாமா? இத்தோடு ஒருமையில் பேசுவதை திமுகவினர் விட வேண்டும். ஆளுநர் தன்னுடைய வேலையை செய்கிறார். திமுகவினர் வரம்பு மீறி கருத்துகளை தெரிவிக்கின்றனர். தமிழக அரசிடம் சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியல் கேட்கும் போது 40 பேர் கொண்ட பட்டியலை மட்டும் கொடுத்தனர்.
நான் 6 ஆயிரம் பேரை கண்டுபிடித்துள்ளேன் எனக் ஆளுநர் கூறியுள்ளார். டி.ஆர்.பாலு குடும்ப அரசியலில் தனது மகனை அமைச்சராக்கி வைத்துள்ளார். அவர் மீது சொத்துகுவிப்பு வழக்கு உள்ளது. நீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு போக வேண்டும். நீட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் துவங்கி என்ன நடக்க போகிறது.
ஆளும் கட்சி 50 லட்சம் கையெழுத்து வாங்க முடியாதா?. திமுகவில் 1 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். 50 லட்சம் கையெழுத்து வாங்க முடியாவிட்டால், திமுக கட்சியை இழுத்து மூடிவிட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும். திமுகவை பொறுத்தவரை நீட்டுக்கு எதிராக நாடகம் நடத்துகிறார்கள். நீட் தேர்வை தமிழகத்தில் எல்லாரும் ஏற்று கொண்டார்கள். 8 வருடம் தரவுகளை எடுத்து பார்த்தால், பின் தங்கிய மற்றும் சாமானிய மக்களுக்கு சாதகமாக தான் நீட் உள்ளது என்பது புரியும்’’ என்றார்.
எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்ற ராஜேந்திர பாலாஜியின் கருத்து தொடர்பான கேள்விக்கு, சிரிப்பு தான் எனது பதில் என்றார். தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர் பதவிக்கு என மரியாதை உள்ளது. மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமர் வேட்பாளர். எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் கனவு இருக்கலாம் என்றார்.