`உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்; பிரச்சினையை சொல்லுங்கள்'- மாணவிகளுக்கு நம்பிக்கை அளித்த முதல்வர் ஸ்டாலின்

`உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்; பிரச்சினையை சொல்லுங்கள்'- மாணவிகளுக்கு நம்பிக்கை அளித்த முதல்வர் ஸ்டாலின்

“எந்த சூழ்நிலையிலும் தற்கொலைக்கு மாணவிகள் தள்ளப்படக் கூடாது. எத்தனையோ சோதனைகளைக் கடந்துதான் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவிகளுக்கு நம்பிக்கையளித்தார்.

சென்னை குருநானக் கல்லூரியில் நடைபெற்ற 50-ம் ஆண்டு பொன்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். தமிழகத்தில் மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடரும் நிலையில், முதல்வரின் உரை மாணவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் அளிக்கும் வகையிலிருந்தது. விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், “மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை தரக்கூடிய எத்தகைய செயல் நடந்தாலும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரியத் தண்டனையைப் பெற்றுத் தருவோம். எந்த சூழ்நிலையிலும் தற்கொலைக்கு மாணவிகள் தள்ளப்படக் கூடாது. எத்தனையோ சோதனைகளைக் கடந்துதான் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்.

சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவதில் தமிழ்நாட்டு மாணவிகள் மன உறுதியும், உடல் உறுதியும் கொண்டவர்களாக வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. என்னுடைய கனவு. அத்தகைய ஆற்றலைக் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். குழந்தைகளைப் பெற்றதோடு பெற்றோரின் பணி எப்படி முடியாததோ, அதுபோல் ஆசிரியர்களின் பணியும் இருக்க வேண்டும். தற்கொலை எண்ணம் என்பது மாணவர்களுக்குக் கூடவே கூடாது. தலை நிமிரும் எண்ணம்தான் இருக்க வேண்டும். உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடிய சிந்தனை கூடாது. உங்கள் பிரச்சினைகளைப் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு உங்களுடன் இருக்கும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in