ஓவைசி பயணம் செய்த ரயிலில் கல்வீசி தாக்குதல்: நிர்வாகிகள் பரபரப்பு புகார்

ஓவைசி பயணம் செய்த ரயிலில் கல்வீசி தாக்குதல்:  நிர்வாகிகள் பரபரப்பு புகார்

நேற்று மாலையில் வந்தே பாரத் ரயிலில் அசாதுதீன் ஒவைசி பயணம் செய்தபோது, ரயில் மீது கற்கள் வீசப்பட்டன என்று அக்கட்சியின் நிர்வாகி தெரிவித்துள்ளார்

திங்கள்கிழமை மாலை ஹைதராபாத் எம்பியும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி வந்தே பாரத் ரயிலில் பயணித்தபோது கற்கள் வீசப்பட்டதாக கட்சியின் நிர்வாகி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏஐஎம்ஐஎம் நிர்வாகி வாரிஸ் பதான் வெளியிட்டுள்ள ட்வீட்டில்,"இன்று மாலை நாங்கள் ஓவைசி, சபீர் கப்லிவாலா மற்றும் கட்சியின் தேசியக் குழுவினருடன் அகமதாபாத்தில் இருந்து சூரத்துக்கு 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' ரயிலில் பயணம் செய்தபோது, ​​அடையாளம் தெரியாத சிலர் ரயில் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைத்துள்ளனர்” என பதிவிட்டு இந்த சம்பவத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் இந்த ரயிலில் கல் வீசப்பட்டதை உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அவர், “நேற்று மும்பை செல்லும் வழியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல் வீசிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவம் அங்கலேஷ்வர் மற்றும் பருச் பகுதிக்கு இடையே நடந்தது. இதனால் E-2 பெட்டியின் வெளிப்புற கண்ணாடி ஜன்னலில் சிறிய சேதம் ஏற்பட்டது, கண்ணாடியின் உள் பக்கத்தில் எந்த சேதமும் இல்லை" என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய வாரிஸ் பதான், "என்ன நடக்கிறது மோடி ஜி. சில நேரங்களில் வந்தே பாரத் ரயிலில் கால்நடைகள் மோதும் சம்பவங்கள் நடக்கின்றன. நாங்கள் சூரத்தை அடையவிருந்தோம். அப்போது திடீரென ரயிலில் கல் வீசப்பட்டு கண்ணாடி உடைந்தது, பின்னர் மற்றொரு கல்லும் மோதியது. இந்த ரயிலில் ஓவைசி பயணம் செய்து கொண்டிருந்தார். எத்தனை தாக்குதல்கள் நடந்தாலும் எங்கள் குரல்கள் அமைதியாகாது" என்று அவர் கூறினார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள குஜராத் தேர்தலுக்காக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in