சந்திரபாபு நாயுடுவின் கார்மீது கல்வீசி தாக்குதல் - ஆந்திர அரசியலில் பரபரப்பு


சந்திரபாபு நாயுடுவின் கார்மீது கல்வீசி தாக்குதல் - ஆந்திர அரசியலில் பரபரப்பு

ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தினர்.

என்டிஆர் மாவட்டத்தில் உள்ள நந்திகமா பகுதியில் நடந்த பேரணியின்போது சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது நேற்று இரவு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் தலைமை பாதுகாப்பு அதிகாரி (சிஎஸ்ஓ) மது பாபு காயம் அடைந்தார்.

விஜயவாடா எம்பி கேசினேனி நானியுடன் நேற்று இரவு நந்திகமா பகுதியில் சந்திரபாபு நாயுடு காரில் சென்று பார்வையாளர்களை சந்தித்தார். அப்போது சந்திரபாபு நாயுடுவின் பின்னால் நின்று கொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரி மது பாபுவின் மீது கல் வந்து விழுந்தது. "அது எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அதனால் மதுவுக்கு காயம் ஏற்பட்டது" என்று சந்திரபாபு நாயுடு கூறினார். அவருக்கு இசட் பிளஸ் அளவிலான பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி வருகிறது.

சந்திரபாபு நாயுடுவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி மதுபாபுவின் கன்னத்தில் கல் தாக்கியதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) கமாண்டோக்கள் உஷார் படுத்தப்பட்டு சந்திரபாபு நாயுடுவைச் சுற்றி வளைத்தனர்.

இந்த நிகழ்வு அப்பகுதியில் பதற்றத்தை அதிகப்படுத்தியது. உடனடியாக நாயுடுவின் வாகனத்தைச் சுற்றி கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டனர். அவர் பயண நிகழ்ச்சியை முடித்துக் கொள்ளுமாறும் போலீசார் கேட்டுக் கொண்டனர். இந்த கல் வீச்சுக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் இந்த சம்பவம் நடந்துள்ளது. கற்களை வீசியவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். இந்த கல்வீச்சு சம்பவம் காரணமாக ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் பரபரப்பு உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in