சிலிர்க்க வைக்கும் ‘சிலை’ அறிவிப்புகள்!

ஒரே மூச்சில் 11 சிலைகள் அமைக்கப்படுகின்றன
அப்துல் கலாம்
அப்துல் கலாம்

சிலைகளை வைத்து சாதி கலவரங்கள் தலைதூக்கிய பிறகு, தமிழகத்தில் சிலை அமைக்கப்படுவது குறித்த அறிவிப்புகள் வெளியாவது மிகவும் அரிதாகவே இருந்தது. ஆனால், தமிழக அரசின் இன்றைய அறிவிப்பின் மூலம் 11 தலைவர்களுக்கு சிலைகள் அமைக்கப்படுகின்றன.

நாவலர் நெடுஞ்செழியன்
நாவலர் நெடுஞ்செழியன்

தமிழக சட்டப்பேரவையில் இன்று (07/09/2021) நடைபெற்ற செய்தித் துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் சாமிநாதன், தலைவர்களுக்கு சிலைகள் வைப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். ‘தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், தலைசிறந்த இலக்கியப் படைப்பாளிகள், சமூக நீதிக்காக போராடியவர்கள், திராவிட இயக்க முன்னோடிகள் ஆகியோரைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிலைகள் நிறுவப்படும்’ என்ற அமைச்சர் சாமிநாதன், யார் யாருக்கு எங்கெங்கு அமைக்கப்பட இருக்கிறது என்பதையும் தெரிவித்தார்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி

அதன்படி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் சிலை அமைக்கப்படுகிறது. சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்களுக்கு சிலைகள் அமைக்கப்படுகின்றன. விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளுக்கு கடலூரில் சிலை அமைக்கப்படுகிறது.

மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமிக்கு அரியலூர் மாவட்டம் கீழபழுவூரிலும், வங்கத்து கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்கு சென்னை ராணிமேரி கல்லூரியிலும், திராவிட இயக்க முன்னோடியும் அதிமுகவின் முக்கிய தலைவராக விளங்கியவருமான நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையிலும் சிலைகள் அமைக்கப்பட உள்ளன.

பெண் சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையிலும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு புதுக்கோட்டையிலும், தமிழறிஞர் மு.வரதராசனாருக்கு ராணிப்பேட்டை மாவட்டத்திலும் சிலைகள் அமைக்கப்படுகின்றன. சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் ப.சுப்பராயனுக்கும் கீழ்பவானி பாசன திட்டம் உருவாகக் காரணமாக இருந்த தியாகி ஈஸ்வரனுக்கும் சிலைகளும் அரங்கமும் அமைக்கப்படுகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in