விஜயகாந்த உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்
Updated on
2 min read

நண்பர் விஜயகாந்த் உடல் நலன்குன்றி இருந்த நிலையில் இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். ஆனால். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கலைஞர் கருணாநிதியுடன் விஜயகாந்த்
கலைஞர் கருணாநிதியுடன் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘’அன்பிற்கினிய நண்பர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தி உள்ளது.

நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர்.

நடிகராக, நடிகர் சங்க தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர்.

குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனி பாசம் கொண்டவர். தனது திருமண உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளை தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களின் கலை உலக பொன் விழாவை பாராட்டி திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர்.

தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலம் குன்றிய போது நேரில் வந்து உடல் நலம் விசாரித்து சென்றதுடன் தலைவர் கலைஞர் மறைவின் போது வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலை தெரிவித்ததையும் வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராக சென்னை கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தை செலுத்தியதையும் எவராலும் மறக்க முடியாது.

ஸ்டாலினுடன் விஜயகாந்த்
ஸ்டாலினுடன் விஜயகாந்த்

தமிழ் உணர்வு தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த ’மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில் கலைஞர் எழுதிய பாடல் காட்சியிலும் நானும் பங்கேற்று இருந்தது நினைவில் மலர்கிறது.

அவருடனான நட்பு எந்த காலத்திலும் எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவே இல்லை. நண்பர் விஜயகாந்த் உடல் நலன்குன்றி இருந்த நிலையில் இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது. கேப்டன் என தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும்.

இந்த மிக துயரமான சூழலில் என்னை நானே தேற்றிக்கொண்டு கேப்டன் விஜயகாந்த் இழந்த தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழக தொண்டர்களுக்கும், திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதி பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in