தமிழ்நாட்டில் காந்தி பிறந்திருந்தால் சாதிச் சங்க தலைவராக மாற்றி இருப்பார்கள்! ஆளுநர் சர்ச்சை பேச்சு

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

’’நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளை மக்கள் நினைவில் இருந்து அகற்றுவதற்கு மாநில அரசு முயற்சிக்கிறது. அதன் ஒரு பகுதியாக, தியாகிகள் பற்றி பள்ளிப் பாடப் புத்தகங்களில் இருந்த பாடங்களை நீக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்

சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர்களான மருது சகோதரர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி இன்று திருச்சியில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துக் கொண்டார். முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்கள் படத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செய்தார்.

பின்னர் பேசிய அவர், ‘’நாட்டின் விடுதலைக்கான போராட்டம் முதன்முதலில் தொடங்கிய இடம் ஸ்ரீரங்கம் கோயில். நாட்டில் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் அவர்களது தியாகங்கள் அடுத்த தலைமுறைக்கு நினைவுபடுத்தக்கூடிய பணியில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.

நான் ஆளுநராக பதவியேற்றவுடன தமிழக அரசிடம் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்களின் பெயர் பட்டியலை கேட்டிருந்தேன். 40 பெயர்களை மட்டும் தான் அவர்கள் எனக்கு தந்தார்கள். நான் பின்னர் எனது சொந்த முயற்சியில் தேடியபோது, 7,000 சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ்நாட்டில் நாட்டின் விடுதலைக்காக போராடி இருப்பது தெரியவந்தது.

கடந்த, 2012ம் ஆண்டு சிவகங்கையில் நடந்த ஒரு சிறிய கலவரத்தை தொடர்ந்து, இன்று வரை அக்டோபர் 23ம் தேதி முதல், 31ம் தேதி வரை, அங்கு மக்கள் இயல்பாக நடமாடுவதற்கு தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது. சிவகங்கை பிரகடனம் குறித்த மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப் படக்கூடாது என்று தமிழக அரசு நினைக்கிறது. 

ஒரு அரசியல் கட்சித் தலைவரின் நினைவு தினம்; பிறந்த தினம் என்றால் இப்படி இவர்களால் தடைபோட முடியுமா?  நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளை மக்கள் நினைவில் இருந்து அகற்றுவதற்கு மாநில அரசு முயற்சிக்கிறது. அதன் ஒரு பகுதியாக, தியாகிகள் பற்றி பள்ளிப் பாடப் புத்தகங்களில் இருந்த பாடங்களை நீக்க மாநில அரசு முயற்சிக்கிறது.

சுதந்திரப் போராட்ட தியாகிகள் எந்த சமூகத்தில் இருந்து வந்தார்கள் என்பதிலிருந்து, அவர்களை சாதித் தலைவர்களாக அடையாளப்படுத்தி, மக்களை ஒன்றுபடவிடாமல் தடுக்கிறார்கள். பசும்பொன் முத்துராமலிங்க தேவர், சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உடன் இணைந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். ஆனால், அவரை ஜாதிக் கட்சி தலைவர் போல அடையாளப்படுத்துகிறார்கள்.

தற்போது, தமிழக பள்ளிகளில் கூட மாணவர்கள் தங்களது ஜாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் கயிறுகள் அணிந்து வருவது வேதனை அளிக்கிறது. இந்திய சுதந்திர தினத்தை கருப்பு நாளாக கடைப்பிடித்தவர்களை எல்லாம், இங்கு பெரிய தலைவர்களாக கொண்டாடுகிறார்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியின் போது புகைப்பட கண்காட்சி நடத்தினார்கள். அதில், காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு, 18 முறை வந்ததை நினைவுபடுத்தும் வகையிலான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. அதில் திராவிட இயக்க கருத்தியலை கொண்ட ஒருவர் கூட இல்லை. எனவே அந்தப் புகைப்பட கண்காட்சியை இந்த முறை அவர்கள் நடத்தவில்லை.

மகாத்மா காந்தி, பகத்சிங், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால், அவர்களையும் சாதிச் சங்க தலைவர்களாக மாற்றி இருப்பார்கள். லண்டனில் பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட, 17 வயது சிறுவன் ராபர்ட் கால்டுவெல் தான் திராவிடம் என்று பிரித்துக் கூறியவர்.

அவரைத்தான் திராவிட கருத்தியலின் தந்தை என்று இவர்கள் போற்றுகிறார்கள். இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.  தமிழகம் புண்ணிய பூமி; சித்தர்கள், முனிவர்கள் வாழ்ந்த பூமி. இங்கு ஆரியம்- திராவிடம் என்பது கிடையாது’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in