`கூலிப்படையே இல்லாத நிலையை காவல் துறை உருவாக்கும்'- முதல்வர் ஸ்டாலின் உறுதி

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

“கூலிப்படை செய்து கொலை செய்த வழக்கு விசாரணைகளை விரைந்து முடித்து கூலிப்படைக்கே முற்றுப் புள்ளி வையுங்கள். கூலிப்படைகளைத் தொழிலாக வைத்திருப்பவர்கள் முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் முடிவடைந்த நிலையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது காவல்துறையினருக்கு சில அறிவுரைகளையும், எச்சரிக்கைகளையும் விடுத்திருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில்,“சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் மாநிலத்தில்தான் வளர்ச்சி என்பது இருக்கும். இந்த ஆட்சியில் வன்முறைகள், சாதிச் சண்டைகள், மத மோதல்கள், துப்பாக்கி சூடு, அராஜகம் என எதுவும் இல்லை. இதுதான் இந்த ஆட்சியினுடைய சாதனை. இந்த அமைதியை உருவாக்கிக் கொடுத்தது தமிழகக் காவல்துறையின் சாதனை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் காரணத்தால்தான் வெளிநாடுகளுக்குச் சென்ற தொழிற்சாலைகள் மீண்டும் தமிழகம் வந்துகொண்டிருக்கின்றன. புதிய முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டினுடைய ஒரு கை நிர்வாகம் என்றால், இன்னொரு கை காவல்துறை. இரண்டும் சரியாகச் செயல்பட்டால் அந்த அரசு தலைசிறந்த அரசாக விளங்கும்.

போதை மருந்து
போதை மருந்து

காவல்துறை என்றாலே குற்றங்களைத் தடுக்கும் துறையாக, தண்டனை வாங்கித் தரும் துறையாக இருக்கின்றது என அனைவரும் நினைக்கிறார்கள். காவல்துறை என்பது குற்றங்களே நடைபெறாத சூழலை மாற்றித் தரவேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய கொள்கை. கொலை, திருட்டு, பாலியல் தொந்தரவு, போதை மருந்துகள், வன்முறைச் சம்பவங்கள் ஆகியவைதான் மிகப் பெரிய குற்றங்கள். இதை எந்த சூழலிலும் நடைபெறாத அளவிற்கு காவல்துறை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். அரசியல் ரீதியாகவோ, மதம் மற்றும் சாதிக் காரணமாகவோ வன்முறைகள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திட்டமிட்டு அரசிற்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் மோதல்கள் உருவாக்க நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். ஆளும் கட்சி, எதிர்கட்சி என பாராமல் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும். யாரிடம் இருந்து அழுத்தம் வந்தாலும் நீங்கள் சட்டத்தின் பக்கமே நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகளுக்கு இந்த அரசில் இடமில்லை.

கூலிப்படை
கூலிப்படை

போதைப் பொருட்களுக்கு மாணவச் செல்வங்கள் அடிமையாவது மிகவும் வேதனையளிக்கிறது. எனவே குட்கா விற்பனையைத் தடுத்து நிறுத்துங்கள். போதையிலிருந்து இளைய சமுதாயத்தைக் காப்பது நமது முக்கியமான கடமை. எவ்வித போதைப் பொருள்கள் நடமாட்டமும் தமிழகத்தில் இருக்கக் கூடாது. கூலிப்படை செய்து கொலை செய்த வழக்கு விசாரணைகளை விரைந்து முடித்து கூலிப்படைக்கே முற்றுப் புள்ளி வையுங்கள். கூலிப்படைகளை தொழிலாக வைத்திருப்பவர்கள் முற்றாக துடைத்தெறியப்பட வேண்டும். மதம், சாதி, வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள் தடுக்கப்பட வேண்டும். வன்முறைப் பேச்சுக்கள் இணையத்தில் உலவவிடும் நபர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். காவல்துறையை மேம்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனால்தான் காவல்துறை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in