பிரச்சாரம் முடித்த கையோடு தந்தை நினைவிடத்தில் ஸ்டாலின்... வெற்றி பெற ஆசி வேண்டினாரா?

கருணாநிதி நிணைவிடத்தில் ஸ்டாலின்
கருணாநிதி நிணைவிடத்தில் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்  நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு தனது தந்தை கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

பிரச்சாரம் நிறைவு கூட்டத்தில் ஸ்டாலின்
பிரச்சாரம் நிறைவு கூட்டத்தில் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தைத தொடங்கினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.  கடந்த மாதம் 22-ம் தேதி திருச்சியில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய அவர் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சென்று ஒவ்வொரு நாளும் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். ஒவ்வொரு நாளும் தங்கியிருக்கும் ஊர்களில் நடைபயிற்சியின்போது நடந்து சென்று காய்கறிச்சந்தை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக நேரடியாக துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி அவர் வாக்கு சேகரித்தார்.

கருணாநிதி நிணைவிடத்தில் ஸ்டாலின், உதயநிதிம் சேகர்பாபு
கருணாநிதி நிணைவிடத்தில் ஸ்டாலின், உதயநிதிம் சேகர்பாபு

இந்த வகையில் பிரச்சாரம் செய்ய கடைசி நாளான நேற்று சென்னையின் மூன்று தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின்  இரவு  சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றார். அங்குள்ள மறைந்த முதல்வரும், அவரது தந்தையுமான கருணாநிதியின் நினைவிடத்தில்  மரியாதை செலுத்தினார். அவருடன் அவரது மகனும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில்  தேர்தலில் தங்களுக்கு முழு வெற்றி கிடைக்க வேண்டும் என்று தந்தையின் நினைவிடத்தில் ஸ்டாலின் வேண்டிக் கொண்டார் என்று திமுகவினர் கூறினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in