மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயல்பட அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயல்பட அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

"நம் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும்" என்று சென்னை தலைமைச் செயலகத்தில் துறைச்செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், " நான் பல மாவட்டங்களுக்குச் சுற்றுப் பயணம் செய்தபோது நம் மீது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பினை மக்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. அவற்றைப் பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி அமைய வேண்டும். குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு நலன் பயக்கும் திட்டங்களில் எவ்வித தொய்வும், தாமதமும் இன்றி பணியாற்ற வேண்டும்.

மாநிலத்தின் வளர்ச்சி என்பது, எந்த அளவிற்கு புதிய தொழில்நுட்பங்களை திட்ட செயலாக்கங்களிலும் கண்காணிப்பிலும் புகுத்துகிறீர்கள் என்பதில் தான் உள்ளது. தற்போது நாம் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். முதலாவது ஆண்டில் அறிவித்துள்ள பல திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட வேண்டியிருக்கிறது. அரசாணை வெளியிடப்பட்ட அறிவிப்புக்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. அதேபோல் நடைமுறைப்படுத்தப்படும் அறிவிப்புக்களை துரிதப்படுத்த வேண்டும்" என்றார்.

மேலும், " நடப்பு ஆண்டிலும் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். இவற்றில் அரசாணை வெளியிடப்பட்டுள்ள இனங்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து இம்மாத இறுதிக்குள் தேவையான அரசாணைகள் வெளியிடப்பட வேண்டும். இதன் பின் துறைத் தலைவர்கள் எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நடைமுறைப்படுத்தி மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அத்துடன் தேவையான இனங்களில் திட்டச் செயலாக்கத்தின் பகுதி மக்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். இவை ஒவ்வொன்றிலும் மாவட்ட ஆட்சியர்கள் ஈடுபடச் செய்து அனைத்து திட்டங்களையும் நீங்கள் நிறைவேற்றிட வேண்டும்.

பேருந்து நிலையத் திட்டங்கள், குடிநீர் மற்றும் சாலை திட்டங்கள், வீட்டு வசதி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவை மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் திட்டங்களாகும். அவற்றை நீங்கள் சிறப்பாக நிறைவேற்றிட வேண்டும். அதேபோல அரசின் சேவைகளான பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதலில் கணினி தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தாமதமின்றி வழங்க வேண்டும். இதற்கு உங்கள் துறை அமைச்சருடன் இணைந்து, துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் வழிநடத்தி, திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in