அன்வர் ராஜா மீது சுண்டுவிரல் பட்டிருந்தாலும் சும்மா இருந்திருக்க மாட்டார் ஸ்டாலின்!

பெங்களூரு புகழேந்தி பேட்டி
பெங்களூரு புகழேந்தி
பெங்களூரு புகழேந்தி

“அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா மீது சுண்டு விரல் பட்டிருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் சும்மா இருந்திருக்கமாட்டார். அதற்கு காரணமானவர்கள் இந்நேரம் சிறைக்குப் போயிருப்பார்கள்” என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.

இன்று அதிமுக தலைமையகத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்பி-யுமான அன்வர் ராஜா பேசுகையில், “வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு கொடுத்ததால் தென் மாவட்டங்களில் அதிமுக 50 இடங்களில் தோல்வியைச் சந்தித்தது” என்று சொன்னாராம். இதைக் கேட்டு ஆவேசமாக எழுந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “அப்படியானால் வன்னியர் ஓட்டு அதிமுகவுக்கு வேண்டாமா?” என்று சத்தம் போட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து காரசாரமான விவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. கடைசியில் கே.பி.முனுசாமி தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக காமதேனு இணையத்துக்கு பேட்டியளித்த பெங்களூரு புகழேந்தி, “அதிமுக தலைமையகத்தில் நடக்கக்கூடாத அசம்பாவிதங்கள் எல்லாம் இன்றைக்கு நடந்திருக்கிறது. அம்மா இருந்திருந்தால் குறிப்பிட்டு நான்கு பேரை மட்டும் பேசச் சொல்லுவார். அதை மீறி யாரும் அங்கே வாய் திறக்க முடியாது. ஒருமுறை, கட்சிப் பொதுக்குழுவில், அதிமுக வழக்கறிஞராக இருந்த ஜோதி ஏதோ ஒரு வார்த்தையை தவறுதலாகச் சொல்லிவிட்டார். உடனே அந்த அரங்கில் இருந்த சிலர் கூட்டமாக எழுந்து அவருக்கு எதிராகக் கூச்சல் போட்டார்கள். வேகமாக எழுந்து மைக்கை வாங்கிய அம்மா, “என்ன... எல்லாரும் சேர்ந்து ரவுடியிஸம் பண்ண வந்திருக்கீங்களா? எத்தன பேர் வந்திருக்கீங்க. ஜோதி அப்படித்தான் பேசுவார். நீங்க பேசுங்க ஜோதி” என்று சொன்னார். அத்தனை பேரும் வாலைச் சுருட்டிக் கொண்டு உட்கார்ந்தார்கள். ஆனால், இன்றைக்கு நடந்த கூட்டத்தில் ஒரு கருத்தைச் சொன்னார் என்பதற்காக அன்வர் ராஜாவை அடிக்கப் பாய்ந்திருக்கிறார்கள். அம்மாகூட எம்ஜிஆருக்கு நிகரான தலைவர் என தன்னை சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆருக்கு நிகரான தலைவராக சித்தரிக்க முயற்சிக்கிறார் அதன் விளைவுதான் இதெல்லாம். 10.5 இட ஒதுக்கீடு அரசாணை போச்சு, அம்மா வாழ்ந்த போயஸ் இல்லத்தை கையகப்படுத்திய அரசாணையும் போச்சு. 700 விவசாயிகளின் சமாதிகள் மீது எழுதப்பட்ட தீர்ப்பு தான் வேளாண் சட்டங்கள் வாபஸ் முடிவு. அப்படியானால், வேளாண் சட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை என்று வக்காலத்து வாங்கினீர்களே அதற்கு நீங்கள் விளக்கம் சொல்லுங்கள்.

இன்றைக்கு அதிமுக தலைமையகத்தில் நடந்த விஷயங்களைப் பார்க்கும் போது கட்சி நல்ல திசையில் போவதாக எனக்குத் தெரியவில்லை. பிரச்சினையை இந்த அளவுக்கு தடிக்கவிடாமல் ஆரம்பத்திலேயே ஓபிஸ் தலையிட்டு சமாதானம் செய்திருக்க வேண்டும். ஆனால், கடைசிவரை அமர் அமைதிகாத்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரைப் பொறுத்தவரை சசிகலாவின் பெயரைச் சொல்லி அதிமுகவை மிரட்டிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

அன்வர் ராஜா
அன்வர் ராஜா

ஆனால், நடப்பது திமுக ஆட்சி. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா மீது ஒரு சுண்டு விரல் பட்டிருந்தாலும் சும்மா இருந்திருக்க மாட்டார் முதல்வர் ஸ்டாலின். அதற்குக் காரணமானவர்கள் இந்நேரம் சிறைக்குப் போயிருப்பார்கள்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in