உள்ளாட்சிகளில் தவறு செய்பவர்கள் கட்சி ரீதியாக மட்டுமின்றி சட்டரீதியாகவும் தண்டிக்கப்படுவார்கள்: ஸ்டாலின் எச்சரிக்கை

உள்ளாட்சிகளில் தவறு செய்பவர்கள் கட்சி ரீதியாக மட்டுமின்றி சட்டரீதியாகவும் தண்டிக்கப்படுவார்கள்: ஸ்டாலின் எச்சரிக்கை

“வார்டு உறுப்பினர்கள் முதல் மாநகராட்சி மேயர் வரை எந்தவித குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் பணியாற்ற வேண்டும்.தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்சி ரீதியாக மட்டுமல்லாமல் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் ” என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

'உள்ளாட்சி நல்லாட்சி' என்ற தலைப்பிலான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு, நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இதில், தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வெற்றி பெற்ற சுமார் 12 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக அமைச்சர்கள், திமுக எம்.பிக்கள் மற்றும் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாகப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று நீங்கள் இந்த இடத்திற்கு வந்துள்ளீர்கள் என்றால் அது சாதாரணமானது அல்ல. உங்களின் உழைப்பு, திறமை, தியாகம் போன்றவையே அதற்குக் காரணம். இங்கு ஆண்களை விட பெண்களே அதிக அளவு உள்ளாட்சி பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உள்ளாட்சிப் பதவிகளில்தான் மக்கள் பணியாற்ற பயிற்சியும், வாய்ப்பும் கிடைக்கும். தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி பெற வேண்டுமானால் அது உள்ளாட்சி பிரதிநிதிகளின் கையில் தான் உள்ளது. பள்ளிப் படிப்பை விட, அரசியல் படிப்பில் தான் அதிக விஷயங்கள் இருக்கிறது. இதில் இருப்பவர்கள் மக்கள் பணியாற்றவே ஆர்வம் காட்டிவர வேண்டும்.

பொறுப்புகள் என்பது சாதாரணமாகக் கிடைத்து விடாது. அப்படி ஒரு பொறுப்பு உங்களைத் தேடி வந்திருக்கிறது என்றால், அதைத் தக்க வைத்துக் கொள்வதும் தொடர்ந்து நீடிப்பதும் உங்கள் கையில்தான் உள்ளது. இன்று நமது செய்கைகள் வழியாகத்தான் கோடிக்கணக்கான மக்கள் பல்வேறு திட்டங்களால் பயன்பெற்றுள்ளனர். எந்தவொரு பிரதிநிதியுமே, மக்கள் பணியாற்றுவதன் மூலமே அவர்களின் பாராட்டைப் பெற முடியும். அதற்கு நீங்கள் மக்கள் பணி செய்திட வேண்டும். வார்டு உறுப்பினர்கள் முதல் மாநகராட்சி மேயர் வரை எந்தவித குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் பணியாற்ற வேண்டும். அது தான் இந்த மாநாட்டின் நோக்கம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்சி ரீதியாக மட்டுமல்லாமல், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in