`ராணி மேரி கல்லூரிக்குள் நுழைந்ததும் ‘கேப்பர் சிறை' தான் நினைவிற்கு வந்தது'- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!

`ராணி மேரி கல்லூரிக்குள் நுழைந்ததும் ‘கேப்பர் சிறை' தான் நினைவிற்கு வந்தது'- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!

ராணி மேரி கல்லூரியில் நடைபெறும் இளைஞர் திறன் திருவிழாவை இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது தனக்கும் ராணி மேரி கல்லூரிக்கும் உடனான பழைய நினைவுகளை மாணவிகளிடம் நினைவு கூறினார்.

விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தைப் பொறுத்தவரை, முதல் மகளிர் கல்லூரி என்றால் அது ராணி மேரி கல்லூரிதான். ராணி மேரி கல்லூரிக்குள் நுழையும் போது எனக்குப் பழைய நினைவுகள்தான் நிறைவிற்கு வந்தன. மிகவும் பழமையான, பெரும் வரலாற்றைக் கொண்டிருக்கக் கூடிய இந்த கல்லூரியை இடிப்பதற்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா முனைந்தார். இந்தக் கல்லூரியை இடிக்கக் கூடாது என மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என எல்லோரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினார்கள். போராட்டத்தின் காரணமாக அன்றைக்கு இருந்த அரசு கல்லூரிக்குள் வரக்கூடிய குடிநீரைத் துண்டித்து வைத்தார்கள். கழிப்பறைகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியர்களுக்கு பணியிடமாற்றம் கொடுத்தார்கள்.

போராட்டத்தின் போது எதிர்க்கட்சி தலைவராகச் சட்டமன்றத்தில் இருந்தேன். சட்டமன்றத்திலிருந்து வீட்டிற்கு வரும் போது முன்னாள் முதல்வர் கருணாநிதியிடமிருந்து ஒரு தகவல் வந்தது. ராணி மேரி கல்லூரியில் நடக்கும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் எனத் தெரிவித்துவிட்டு வரச் சொல்லியிருந்தார். போராட்டத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்க வந்த போது, வாயிலிலிருந்த காவலர், கதவைத் திறந்து என்னை உள்ளே அனுப்பி வைத்தார். போராட்டத்தில் இருந்த மாணவிகளைச் சந்தித்த நான் ஒரு சில நிமிடங்கள் அவர்களிடம் பேசிவிட்டுச் சென்றேன். அப்போதும் வாயில் காவலர்கள் என்னை மரியாதையாகத்தான் வெளியில் அனுப்பி வைத்தார்கள்.

ராணி மேரி கல்லூரியில் பூட்டியிருந்த வாயில் கதவில் மேல் ஏறிக் குதித்து கல்லூரிக்குள் சென்று மாணவிகளைத் தூண்டிவிட்டு வந்ததாக அன்றைக்கு இரவே காவல்துறையினர் என்னைக் கைது செய்தார்கள். இந்த வழக்கில் கடலூர் சிறையில் ஒரு மாத காலம் சிறையிலிருந்தேன். இந்த இடத்திற்கு ‘கேப்பர்’ என்று ஒரு பெயர் உண்டு. என்னை அடைத்து வைத்த சிறைக்கும் ‘கேப்பர் சிறை’ என்றுதான் பெயர். இந்த கல்லூரியில் 3.2 கோடி மதிப்பில் கலைஞர் மாளிகை கட்டப்பட்டது. கடந்த ஆட்சியாளர்கள் கலைஞர் என்ற பெயரை நீக்கிவிட்டார்கள். மீண்டும் அதை நாம் சூட்டியிருக்கிறோம். கட்டடத்தில் இருக்கும் பெயரை நீக்குவதால், மக்கள் மனதிலிருந்து அவரை நீக்க முடியாது” எனக் கல்லூரிக்கும் தனக்குமான நெருக்கத்தைத் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in