அனைத்துச் சேவைகளையும் ஒருங்கிணைக்க வரும் கிராமச் செயலகங்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் கிராமச் செயலகங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, அதனைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழகத்திலும் இன்று சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.

அதில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருக்கு காவல் துறை சார்பாகவும் கிராம சபையின் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றிருந்த பலதரப்பட்ட மக்களிடமும் முதல்வர் உரையாடினார். அரசின் நலத்திட்டங்கள் அவர்களைச் சென்று சேர்ந்திருக்கிறதா, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றனவா, வேறு என்ன குறைகள் உள்ளன என்பதையெல்லாம் மக்களிடம் நேரில் கேட்டறிந்தார்.

அப்போது அவரிடம் அங்காடியில் வழங்கப்படும் அரிசி தரமாக இல்லை என்று பெண்கள் புகார் தெரிவித்தனர். எந்தக் கடை என்று அவர்களிடம் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், அருகிலிருந்த ஆட்சியரிடம் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதேபோல தங்களுக்கு ஊதியம் காலதாமதமாகவும், குறைவாகவும் வழங்கப்படுவதாக சுகாதாரப் பணியாளர்கள் முறையிட்டனர். அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் முதல்வர் உறுதியளித்தார்.

மக்களிடம் குறைகளைக் கேட்ட பிறகு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், உத்திரமேரூர் கல்வெட்டு உட்பட காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெருமைகளைப் பட்டியலிட்டார். அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்வதில் பெருமைப்படுவதாக அவர் கூறினார்.

உள்ளாட்சியில் பெண்களுக்கு அதிக இடம் ஒதுக்கீடு, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வுப்படி உயர்வு, சிறந்த ஊராட்சிகளுக்கு ‘உத்தமர் காந்தி விருது’ உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதைப் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் நீடித்த நிலைத்த வளர்ச்சியைப் பல்வேறு திட்டங்களைக் கொண்ட ‘திராவிட மாடல்’ நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசு காத்திருப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர், கிராமங்களில் அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைக்க கிராமச் செயலகங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in