மாறும் அரசியல் வானிலை: மாற்றம் விளைவிக்குமா மம்தா – ஸ்டாலின் சந்திப்பு?

மாறும் அரசியல் வானிலை: மாற்றம் விளைவிக்குமா மம்தா – ஸ்டாலின் சந்திப்பு?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சென்னை சந்திப்பு தேசிய அரசியலில் மாற்றம் விளைவிக்குமா என்பதோடு அந்த மாற்றம் எம்மாதிரியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புக்கும் வித்திட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் இடையிலான பூசல் நாடறிந்தது. இதன் உச்சமாக மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கர் மற்றும் முதல்வர் மம்தா இடையே நேரிடையான மோதல் நிலவியது. மம்தா மற்றும் மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணமூல் காங்கிரஸாரை சிறப்பாக எதிர்கொண்டதற்காகவே, பாஜக சார்பிலான வேட்பாளராக துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஜக்தீப் தன்கர் முன்மொழியப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஜக்தீப் தன்கர் துணை குடியரசுத் தலைவரானதை அடுத்து மணிப்பூர் ஆளுநராக இருக்கும் இல.கணேசன் மேற்கு வங்க பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். தமிழக பாஜகவின் மூத்த தலைவராக செயல்பட்டு ஆளுநர் பொறுப்புக்கு உயர்ந்த இல.கணேசன், மேற்கு வங்க ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்ததும் மாநிலத்தில் நிலவிய ஆளுநர்- முதல்வர் மோதல் போக்கு முடிவுக்கு வந்தது.

அண்மையில் துர்கை பூஜை அழைப்புக்கு இணங்கி மம்தா பானர்ஜியின் இல்லத்துக்கு வருகை தந்த இல.கணேசன், மம்தாவின் பக்தி மட்டுமன்றி அவரது எளிமை குறித்தும் சிலாகித்தார். ஆளுநர் மாளிகைக்கு எதிரான திரிணமூல் காங்கிரஸாரின் ட்விட்டர் பதிவுகளும் அடங்கிப்போயின. இந்நிலையில் தனது மூத்த சகோதரர் இல.கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா இன்று (நவ.03) சென்னையில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதில் பங்கேற்க முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் இல.கணேசன் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு இணங்கி சென்னைக்கு நேற்று வருகை தந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் அவரது இல்லத்தில் சந்தித்தார் மம்தா. பாஜக எதிர்ப்பில் முழுமூச்சாக இருக்கும் திமுக கட்சியின் தலைவரை அதே போன்ற ஒத்த அலைவரிசையில் இயங்கும் மம்தா சந்தித்திருப்பது வட இந்திய அரசியல் நோக்கர்கள் மத்தியில் பேசு பொருளாகியிருக்கிறது. அதே போல மம்தாவின் பாஜக எதிர்ப்பிலும் தென்பட்டிருக்கும் மாற்றமும் கடந்த சில மாதங்களாக அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரதமர் மோடியை முழுமூச்சாக எதிர்த்து வந்த மம்தா திடீரென அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். செப்டம்பர் மத்தியில் மேற்கு வங்க சட்டசபையில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் மேற்கு வங்கத்தில் அத்துமீறியும் அரசியல் உள்நோக்கத்துடனும் ஆய்வுகள் மற்றும் கைதுகளை மேற்கொள்வதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. திரிணமூலின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் இந்த ரெய்டுகள் மற்றும் கைதுகளுக்கு ஆளாகி வருவது கட்சியினர் மத்தியில் கலக்கத்தையும் தந்தது.

மத்திய அரசு ஏஜென்சிகளின் ஆய்வுகள் மற்றும் விசாரணைகள் முழுக்கவும் ஆதாரபூர்வமான பாதையில் பயணித்ததும், அவை திரிணமூல் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயரை தர ஆரம்பித்ததும் மம்தாவுக்கு புதிய நெருக்கடிகளை தந்தன. இந்த சூழலில், பாஜக எதிர்ப்பில் குறிப்பாக மோடி எதிர்ப்பில் அதன் பிறகு அடக்கி வாசிக்க ஆரம்பித்தது பார்க்கப்பட்டது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகளின் மேற்கு வங்க பாய்ச்சலின் பின்னணியில் பிரதமர் மோடி இருக்க வாய்ப்பில்லை என்று தான் நம்புவதாக மம்தா தெரிவித்தார். மம்தாவின் மோடி மீதான திடீர் கரிசனம் இன்று வரை தொடர்கிறது.

முன்னதாக 2024 மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் அணிகளுக்கு மாற்றாக புதிய அணியை முன்னெடுப்பதில் மம்தா பானர்ஜி ஆர்வம் கொண்டிருந்தார். அவரது ஆதரவாளர்கள் மத்தியில் வரும் மக்களவை தேர்தலின் பிரதமர் வேட்பாளராக மம்தாவை நிறுத்த தீவிரம் காட்டினர். இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியுடன் நேசக்கரம் பூண்டிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுடனான மம்தாவின் சென்னை சந்திப்பு வட இந்தியாவில் முக்கிய பேசுபொருளாகி இருக்கிறது.

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை நிறுத்தும் வகையில் தேசிய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் ஸ்டாலின். காங்கிரஸ் எதிர்ப்பில் தீவிரமாக களமாடும் மம்தா இதனை ரசிக்காதபோதும், பாஜக எதிர்ப்பு என்ற அலைவரிசையில் ஸ்டாலின் பக்கம் நின்றார். ஆனால் அந்த பாஜக எதிர்ப்பில் மம்தா தளர்ந்திருக்கும் நிலையில் ஸ்டாலினுடனான அவரது சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் அரசியல் பேசவில்லை எனவும் இரு தலைவர்களும் பேட்டியளித்துள்ளனர். ஆனால் மம்தா தனது தனி பாணியில் ‘அரசியல் தலைவர்கள் சந்திப்பில் எல்லாம் இருக்கும்’ என்று பொடி வைத்துள்ளார்.

மம்தாவின் பாஜக மீதான திடீர் கரிசனம் போலவே திமுகவும் பாஜக மீது கணக்கான மென்போக்கினை கையாள்வதாக விமர்சனம் உண்டு. இந்தி திணிப்பு எதிர்ப்பு முதல் ஆளுநருக்கு எதிரான நகர்வு வரை திமுக தீவிரம் காட்டினாலும், எதிர்வரும் மக்களவை தேர்தலுக்கான வியூகங்கள் மற்றும் தமிழகத்தில் பாயத் தயாராக உள்ள மத்திய அரசு விசாரணை அமைப்புகளின் தீவிரம் ஆகியவற்றால் மதில் மேல் பூனையாக காட்சி தருகிறது. அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜகவின் திமுக எதிர்ப்பும், மாநிலத்தில் பாஜக கட்சியை வளர்த்தெடுக்கவே என்றொரு காரணம் கற்பிக்கப்படுகிறது. இந்த சூழலில் இல.கணேசன் இல்ல நிகழ்வை முன்வைத்து மம்தா - ஸ்டாலின் இடையிலான சந்திப்பு பல்வேறு கணிப்புகளுக்கு வித்திட்டிருக்கின்றன. பலதரப்பு முகாம் அரசியல் ஆளுமைகளின் சந்திப்பு மூளும் மேகங்கள் போல தவிர்க்க இயலாத எதிர்பார்ப்புகளையும் தந்திருக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in