ஸ்டாலின் சென்றுள்ளதுதான் இன்பச் சுற்றுலா: செல்லூர் ராஜூ கிண்டல்

ஸ்டாலின் சென்றுள்ளதுதான் இன்பச் சுற்றுலா: செல்லூர் ராஜூ கிண்டல்

"வெளிநாட்டில் முதலீட்டை ஈர்க்க முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பெருமக்கள் வெளிநாடு சென்றபோது ஸ்டாலின் இது இன்பச் சுற்றுலா என்று கேலி கிண்டல் பேசினார். தற்போது அவரே தன் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். இது இன்பச் சுற்றுலா இல்லையா?'' என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எண்ணற்ற பணிகளை அம்மா அரசு செய்தது. பெரியார் பேருந்து நிலையத்தில் நடந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளை குறை கூறிய அமைச்சர் (பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்) இதன் திறப்பு விழாவில் காணொளி காட்சியில் பங்கேற்றார். பெரியார் பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம் கட்டப்பட்டு வந்தது. தற்போது அந்தத் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, மதுரை மக்களின் 50 ஆண்டு கால குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வண்ணம் 1,292 கோடி மதிப்பீட்டில், முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டப் பணிகளை முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆகியோர் மதுரையில் துவக்கிவைத்தனர். இந்தப் பணிகளுக்காக மதுரையில் குழாய்கள் எல்லாம் இறக்கப்பட்டன. தற்போது திமுக ஆட்சியில் இந்த பணிகள் எல்லாம் முடக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக முல்லை பெரியாற்றில் இருந்து வைகைக்கு தண்ணீர் வரும் பாதையில் கிணறு தோண்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

"ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணியில் ஏராளமான முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு உள்ளதே?" என்ற கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, "ஸ்மார்ட் திட்டப் பணியில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. மத்திய நிபுணர் குழு ஆய்வு செய்த பின்புதான் பணிகள் நடைபெற்றன" என்றார்.

போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "100% பஸ்கள் ஓடும் என்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் கண்ணப்பன். ஆனால், அமைச்சர் துரைமுருகனோ வேலைநிறுத்தத்தில் திமுக பங்கேற்கும் என்று கூறுகிறார். திமுகவின் இந்த இரட்டை வேடத்தால் கடைசியில் பாதிக்கப்பட்டது மக்கள்தான். இன்று வெறும் 30 சதவீத பேருந்துகள் மட்டும்தான் இயங்குகிறது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "வெளிநாட்டில் முதலீட்டை ஈர்க்க முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் பெருமக்கள் வெளிநாடு சென்றபோது ஸ்டாலின் இது இன்பச் சுற்றுலா என்று கேலி கிண்டல் பேசினார். தற்போது அவரே தன் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். இது இன்பச் சுற்றுலா இல்லையா? என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in