
சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆதரவாக நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அப்பகுதி மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், பேட்டியின் நிறைவில் மெல்ல மெல்லச் சோர்வடைந்து, பேட்டி முடிந்த மறுநிமிடம் மயங்கிச் சரிந்தார். உடனே அவரை தொண்டர்கள் தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். வெயில் தாக்கத்தால் ஏற்பட்ட மயக்கம் என்பதால், முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், சீமானை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, உடல் நிலை குறித்து விசாரித்ததுடன், உடல் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார். இதற்கு நன்றி தெரிவித்து இன்று மதியம் 3 மணி அளவில் 'ட்விட்' செய்துள்ளார் சீமான்.
அரசியலில் எதிரும், புதிருமாக இருந்தாலும், ஏற்கெனவே சீமானின் தந்தை மறைந்தபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.