நாடே அவரை ‘பத்து ரூபாய் பாலாஜி’ என்கிறது!

முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அதிரடி பேட்டி
வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்இரண்டே ஆண்டுகளில் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்துவிட்டார் ஸ்டாலின்: வைகைச்செல்வன் அதிரடி பேட்டி!

திமுக அரசுக்கு எதிரான போராட்டங்கள், ஆளுநரிடம் மனு என மீண்டும் பரபர அரசியலுக்குள் வந்திருக்கிறது அதிமுக. ஒற்றைத் தலைமை விவகாரம், உட்கட்சி பஞ்சாயத்துகள் எல்லாம் ஒருவாறு முடிவுக்கு வந்த நிலையில் உற்சாகமாக களத்தில் இறங்கியுள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள். இந்த சூழலில் முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தித் தொடர்புச் செயலாளருமான வைகைச்செல்வனிடம் பேசினோம்.

சமீபத்தில் திமுக அரசுக்கு எதிராக மாவட்டங்கள் தோறும் அதிமுக நடத்திய போராட்டம் வெற்றிபெற்றதா?

நிச்சயமாக. ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் சக்தியை திரட்டுகிற முயற்சி அது. இந்தப் போராட்டத்தில் அதிமுக தொண்டர்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டனர். பொதுமக்களும் திமுகவின் அராஜக ஆட்சிக்கு எதிராக அதிமுகவுக்கு ஆதரவாக நிற்க தயாராகிவிட்டனர். தமிழகம் முழுவதும் இப்போராட்டம் அதிமுகவினரிடையே புதிய எழுச்சியை உருவாக்கியுள்ளது.

திமுக அரசுக்கு எதிராக அதிமுக முன்வைக்கும் பிரச்சினைகள் என்ன?

கள்ளச்சாராய சாவுகள் தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் நடக்கிறது. விழுப்புரம் ஏ.கே.குப்பம் மற்றும் செங்கல்பட்டில் சித்தாம்பூரில் விஷச்சாராய மரணங்கள் நடந்தன. மாவட்டம் விட்டு மாவட்டம் இப்படி கள்ளச்சாராய மரணங்கள் நடக்கிறதென்றால், கள்ளச்சாராயம் மாவட்டங்கள் தோறும் வேரூன்றி பரவியிருக்கிறது என்றுதான் அர்த்தம். அதுபோல தஞ்சையில் போலி மது அருந்தி இருவர் உயிரிழந்தனர்.

விஷச்சாராய சாவுகள் நடந்த பின்னர்தான், அது தொடர்பாக 5 ஆயிரம் பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அப்படியானால் இத்தனை நாள் காவல்துறை ஏன் அவர்களை கைதுசெய்யவில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாத போதுகூட கள்ளச்சாராய விற்பனை தமிழகத்தில் நடக்காதவாறு கட்டுப்பாட்டில் வைத்திருந்தது அதிமுக அரசு. ஆனால், இப்போது எல்லாம் தறிகெட்டு போய்விட்டது.

வைகைச் செல்வன்
வைகைச் செல்வன்இரண்டே ஆண்டுகளில் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்துவிட்டார் ஸ்டாலின்: வைகைச்செல்வன் அதிரடி பேட்டி!

தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளும், 4,500 ‘பார்’களும் இயங்குகிறது. இப்போது டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகிறது. வரும் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் டார்கெட் வைத்திருக்கிறார்கள். அமைச்சராக இருக்கிறவர் மக்களிடம் குடிக்கு எதிராக பிரச்சாரம் செய்யவேண்டும். ஆனால், அவர் தானியங்கி மது வழங்கும் இயந்திரத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதை நினைத்து வெட்கப்படுவதா? வேதனைப்படுவதா?

இந்த நிலையில்தான் திராவிட மாடல் ஆட்சி உள்ளது. மதுவிலக்கு கொண்டுவருவதாக சொல்லி ஆட்சியைப் பிடித்த திமுக, இப்போது மது விற்பனையை அதிகரித்து வருகிறது. 500 கடைகளை மூடுவதாக சொல்கிறார்கள். அப்படியானால் மது விற்பனை குறையத்தானே செய்யும். எப்படி இவர்கள் டார்கெட்டை அதிகப்படுத்துகிறார்கள்.

10 மணி நேரம்தான் டாஸ்மாக் கடைகள் திறந்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் 24 மணிநேரமும் தங்குதடையின்றி மதுவிற்பனை நடக்கிறது. கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனையும் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையின் கரங்கள் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட அமைச்சர்கள் தலையிடுவதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக விற்பதால் நாடே அவரை ‘பத்து ரூபாய் பாலாஜி’ என்று குற்றம்சாட்டுகிறது. இதுகுறித்து ஏன் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஜப்பானுக்குச் சென்று முதலீட்டை ஈர்ப்பதாக சொல்கிறார். ஆனால் செந்தில் பாலாஜி, பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்று பெருமளவில் முதலீட்டை ஈர்க்கிறார்.

அதுபோல அமைச்சர் பிடிஆர், உதயநிதியும், சபரீசனும் 30 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாகவும், அதனை எங்கே வைப்பதென தெரியாமல் தவிக்கிறார்கள் எனவும் பேசிய ஆடியோ லீக்கானது. முதலில் இந்த ஆடியோ உண்மையில்லை என்றார்கள். அப்படியானால் ஏன் அவரை வேறு இலாகாவுக்கு மாற்றினார்கள். அப்படியானால் ஆடியோவில் கூறப்பட்ட செய்தி உண்மையென்றுதானே அர்த்தம். இதையெல்லாம் இனி மக்களிடம் எடுத்துச்செல்வதே அதிமுகவின் பணியாக இருக்கும்.

அப்படியானால் இனி அரசுக்கு எதிரான போராட்டங்கள் அணிவகுக்கும் என்கிறீர்களா?

நிச்சயமாக. மக்கள் விரோத திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டை, சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை, சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தன்மையை நிச்சயமாக மக்களிடத்தில் எடுத்துச் சொல்வோம்.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்இரண்டே ஆண்டுகளில் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்துவிட்டார் ஸ்டாலின்: வைகைச்செல்வன் அதிரடி பேட்டி!

ஆனால் திமுகவினர், 2024 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் வெல்வோம் என்கிறார்களே?

வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவதுதான் அதிமுகவின் இலக்கு. அதற்கு முன்னோட்டமாக மக்களிடம் திமுக அரசின் அவலங்களை அம்பலப்படுத்தவே இத்தகைய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கிறோம். இது, வரும் நாட்களில் இன்னும் வீரியமடையும். இந்த ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையை ஒன்று திரட்டி மக்களவைத் தேர்தலில் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம்.

2 ஆண்டுகளுக்குள்ளேயே திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் உருவாகிவிட்டதா?

நீங்கள் மக்களிடம் பேசிப்பாருங்கள். நிறையப் பேரிடம் இப்போதே திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை உருவாகிவிட்டது. குறுகிய காலகட்டத்தில் வெறுப்பைச் சம்பாதித்த அரசுகளில் ஸ்டாலின் அரசாங்கம் முதன்மையானது. நிர்வாகச் சீர்கேடு, லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுவதால் இந்த ஆட்சியை மக்கள் வெறுக்கிறார்கள்.

அதுபோல திமுகவின் குடும்ப அரசியல் மக்களை கோபமடையச் செய்துள்ளது. கருணாநிதிகூட ஸ்டாலினை படிப்படியாகவே அமைச்சராக்கினார். ஆனால் இவர்கள், மக்கள் என்ன நினைப்பார்களோ என்பது பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் உதயநிதியை உடனடியாக அமைச்சராக்கி 10-வது இடத்தில் அமரவைத்துள்ளனர். குடும்ப அரசியல் நாடு முழுவதும் இருந்தாலும், திமுக அதனை அப்பட்டமாக செய்வதால் மக்கள் கொதிப்பில் உள்ளனர். குடும்ப அரசியல், ஊழல், அமைச்சர்களை தட்டிக்கேட்க முடியாத பொம்மை முதல்வர் என்பது போன்ற விவகாரங்களை மக்களிடம் கொண்டுசென்று மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெறுவோம்.

ஈபிஎஸ் வைகைச்செல்வன்
ஈபிஎஸ் வைகைச்செல்வன்

உட்கட்சி பிரச்சினைகள் ஓய்ந்து ஒற்றை தலைமையாக ஈபிஎஸ் வந்துள்ளார். அவரின் செயல்பாடுகள் எப்படி உள்ளது?

விரைந்து முடிவெடுக்கும் ஆற்றல் என்பது ஒற்றை தலைமைக்குத் தான் சாத்தியம். இரண்டு, மூன்று தலைமைகள் இருந்தால் முடிவெடுப்பதில் காலதாமதம் ஏற்படும். எனவே, ஈபிஎஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகிறது. அனைத்து விவகாரங்களிலும் விரைந்து முடிவெடுக்கிறார். அடுத்து, ஆகஸ்ட் மாதம் மதுரையில் மாபெரும் மாநாடு நடத்தவுள்ளோம். அதன்பின்னர் மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை இன்னும் விரைவுப்படுத்துவோம்.

ஓபிஎஸ்ஸும் தினகரனும் இணைந்து செயல்படப்போவதாக சொல்வது அதிமுகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்துமா?

தினகரன் ஒரு கட்சியை வைத்துள்ளார். அந்தக் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் பெரும்பாலானோர் அதிமுகவில் இணைந்துவிட்டனர். எனவே, அக்கட்சியால் தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. தினகரன் ஒரு நம்பிக்கை துரோகி என்று சொன்னவர் ஓபிஎஸ். ஓபிஎஸ் நல்ல நடிகர் என்று சொன்னவர் தினகரன். ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, “அம்மாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, அதற்குக் காரணம் சசிகலாதான்” என்று சொன்னார். இப்போது இவர்கள் ஒன்றிணைந்துள்ளார்கள். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் இந்தக் கூட்டணியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே, இவர்களால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் வராது.

வைகைச் செல்வன்
வைகைச் செல்வன்இரண்டே ஆண்டுகளில் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்துவிட்டார் ஸ்டாலின்: வைகைச்செல்வன் அதிரடி பேட்டி!

இவர்கள் இணைவதால் தென்மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்கிறார்களே..?

ஓபிஎஸ் - தினகரன் இணைந்தால் தென் மாவட்டங்களில் வெற்றிபெறலாம் என நினைக்கிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தினகரன் கட்சி ஓரளவு வாக்குகளைப் பெற்றது. இதனால் 10 முதல் 16 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி பாதிக்கப்பட்டது. ஆனாலும் அவர்களால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. தற்போது தென்மாவட்டங்களில் உள்ள தினகரன் கட்சியின் நிர்வாகிகள் சாரை சாரையாக அதிமுகவில் இணைகின்றனர். ஓபிஎஸ் அணியும் மிகவும் பலவீனப்பட்டு நிற்கிறது.

ஒரு நிலையான கொள்கை இல்லாமல், லட்சிய நோக்கம் இல்லாமல் ஓபிஎஸ் செயல்படுகிறார். லட்சிய நோக்கம், நிலையான கொள்கை இருந்த வைகோவே காணாமல் போய்விட்டார். தினகரனும், ஓபிஎஸ்ஸும் தங்கள் கைக்கு கட்சி வரும் என்ற போலியான நம்பிக்கையில் உள்ளனர். எஸ்டிஎஸ், பாக்யராஜ், ப.சிதம்பரத்தின் ஜனநாயகப் பேரவை என பல கட்சிகள் காணாமல் போனதைப் போல இவர்களும் காணாமல் போவார்கள்.

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் வார்த்தைப்போர் வெடித்ததே... தற்போதைய நிலைமை என்ன?

பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று பொதுச்செயலாளர் ஈபிஎஸ் கூறியுள்ளார். பாஜக தேசிய அளவில் ஆளும் கட்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் அதிமுகதான் மிகப்பெரிய கட்சி. எனவே, இங்கே அதிமுகவின் தலைமையில்தான் கூட்டணி அமையும். எங்கள் வார்த்தைகளுக்கு அவர்கள் மதிப்பளிப்பார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in