இனியாவது ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை உண்டாக்காமல் இருப்பார்களா?

இனியாவது ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை உண்டாக்காமல் இருப்பார்களா?

திமுக பொதுக்குழு வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தனது மனக் குமுறலை தொண்டர்களிடையே கொட்டித் தீர்த்துவிட்டார். அவர் அப்படி வெளிப்படையாகப் பேசியது தமிழக அரசியலில் அனலைக் கிளப்பி இருக்கிறது.

ஏகப்பட்ட களேபரங்களுடன் நடந்து முடிந்த திமுக உட்கட்சி தேர்தல்களுக்குப் பிறகு சென்னையில் கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பல்வேறு பக்கங்களில் இருந்து வருகின்ற பல்முனைத் தாக்குதல்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவன் நான். ஒரு பக்கம், திமுக தலைவர். இன்னொரு பக்கம், தமிழ்நாட்டின் முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல இருக்கிறது என் நிலைமை. இத்தகைய சூழலில் இருக்கக்கூடிய என்னை மேலும் துன்பப்படுத்துவது போலக் கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான் என்ன சொல்வது?யாரிடம் சொல்வது?

நாள் தோறும் காலையிலே நம்மவர்கள் யாரும் எந்த புதுப்பிரச்சினையையும் உருவாக்கி இருக்கக்கூடாது என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களிலே என்னை தூங்கவிடாமல் கூட ஆக்கிவிடுகிறது. என் உடம்பைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். உங்களின் செயல்பாடுகள் கழகத்திற்கும், உங்களுக்கும் பெருமை தேடித் தரவேண்டுமே தவிரச் சிறுமைப்படுத்துவதாக அமையக்கூடாது. பொது இடங்களில் சிலர் நடந்துகொள்ளும் முறைகளின் காரணமாக, கழகம் பழிகளுக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிறது” என தனது மனக் குமுறல்களை வெளிப்படையாகக் கொட்டித் தீர்த்தார்.

கடந்த மார்ச் மாதம் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ”எனக்கு 69 வயதாகிறது. இதைச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். உணவுப் பழக்க வழக்கத்தையும், உடற்பயிற்சியைக் கடைப்பிடிப்பதும்தான் இதற்குக் காரணம். பொறுப்புகள், பதவிகளைப் பற்றி நான் கவலைப்பட்டது கிடையாது. பதவி இன்றைக்கு வரும்; நாளைக்குப் போகும்.” என்றார். இப்படி மகிழ்வாகப் பேசியவரைத்தான் “எனக்குத் தூக்கமே இல்லை; என் உடம்பைப் பாருங்கள்” என திமுகவினர் இப்ப்போது பேச வைத்துவிட்டார்கள்.

முதல்வரின் வருத்தப் பேச்சு குறித்து திமுக வட்டாரத்தில் பேசினோம். “தளபதி ஏதோ உணர்ச்சிவசப்பட்டு எதேச்சையாக பேசியது இல்லை. திட்டமிட்டேதான் அவர் பேசி இருக்கிறார். அவர் பேசிய ஒவ்வொரு வரிக்குள்ளும் பல அர்த்தங்கள் பொதிந்து கிடக்கிறது. கட்சிப் பதவியோ, முதல்வர் பதவியோ தந்தையால் கிடைக்கவில்லை. தனது உழைப்பால் கிடைத்தது என நம்புகிறார் தளபதி. இதைத் தக்கவைக்க வேண்டும் எனப் போராடுகிறார். அதற்காக தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நல்ல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என நினைக்கிறார். ஆனால், அதற்கு எதிராகவே எல்லாம் நடைபெறுவது அவரது மனவருத்தத்திற்கு முக்கிய காரணம்.

‘திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல. திமுகவில் இருக்கும் பெரும்பாலானோர் இந்துக்கள்தான்’ என தளபதி மேடைகளில் முழங்கிவிட்டு வருகிறார். அடுத்த சில தினங்களிலேயே, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, ‘இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபசாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத் தகாதவன். எத்தனை பேர் விபசாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்?’ என்கிறார். இவரைப் போலவே, தருமபுரி எம்பி-யான செந்தில்குமாரும் இந்து மதச் சடங்குகள் குறித்து கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன் வைக்கிறார். இதெல்லாம் இந்துக்களிடையே தான் உருவாக்கிவைத்த ஆதரவைச் சீர்குலைத்துவிட்டதாக தளபதி நினைக்கிறார்.

பெண்கள் மத்தியில் நற்பெயரை எடுக்க வேண்டும் என மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், உயர் கல்வி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தினார் தளபதி. ஆனால், ‘ஓசி பஸ்ஸிலதானே போறீங்க…’ என அமைச்சர் பொன்முடி நக்கலாகப் பேசி, அந்த திட்டத்தின் மூலமாகக் கிடைத்த நற்பெயரையே கலங்கடித்துவிட்டார். அதுபோல், ‘உனக்கும் ஆயிரம் ரூபாய், உங்க அம்மாவுக்கும் ஆயிரம் ரூபாய்’ என அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார். வேலூர் பகுதியில் ஆய்வுக்குச் சென்ற அவர் பெண் மருத்துவரை ஒருமையில் பேசுகிறார். இதெல்லாம் பெண்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கைக் குலைக்கிறது.

சாலை போடாமலேயே ஒரு அமைச்சர் பில் போடுகிறார். அதுபோல் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கோப்புகளில் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவதாக ஒரு ஐஏஎஸ் அதிகாரி முதல்வரிடம் புலம்பி இருக்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் தன் காதிற்கு வரும்போது, சம்பந்தப்பட்ட அமைச்சர்களை அழைத்து முதல்வர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதையெல்லாம் மனதில் வைத்து, மேடையில் தளபதி வருத்தப்பட்டுப் பேசிக் கொண்டிருக்கையில், பொன்முடி சிரித்துக்கொண்டு இருக்கிறார். இன்னொரு மூத்த நிர்வாகி தனது உதவியாளரிடம் தனது செருப்பை எடுத்துவரச் சொல்கிறார். இதையெல்லாம் பார்த்தால் அவரால் எப்படி தங்கிக்கொள்ள முடியும்?

வயதைப் பொருட்படுத்தாமல் 70 வயதிலும் ஓடியாடி கட்சிப் பணிகளையும், ஆட்சிப் பணிகளையும் தளபதி கவனிக்கிறார். ஆனால், தன்னுடைய பொறுப்பை ஏற்கக்கூடியவர்கள் குடும்பத்தில் யாரும் இல்லை என்பது அவருக்கு இன்னொரு மனவருத்தம். திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் காலையிலேயே சுறுசுறுப்பாக நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வந்தார் உதயநிதி. ஆனால் இப்போது அதெல்லாம் மலையேறிவிட்டது. அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு பிற்பகலில் தான் நேரம் கொடுக்கிறார்கள். கட்சி நிர்வாகிகள் கூட, அவருக்காகப் பல மணிநேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. குடும்பம் சார்ந்த இன்னும் சிலராலும் தளபதிக்கு மன உளைச்சல் இருக்கிறது. ஆனாலும் அவர்களை எல்லாம் ஒதுக்கிவைக்க முடியாமல் தவிக்கிறார்.

கட்சியினர், குடும்பத்தினர் பிரச்சினைகள் போதாது என்று தளபதியைச் சுற்றி இருக்கும் அதிகாரிகள் சிலர் தங்களுக்குள் நடத்தும் ஈகோ யுத்தமும் அவரைப் படுத்தி எடுக்கிறது. முக்கியமான சில கோப்புகளை தளபதியே முடிக்க நினைத்தாலும் மாப்பிள்ளையின் பேரைச் சொல்லி சில அதிகாரிகள் அந்தக் கோப்பை எடுக்கவிடாமலே செய்து விடுவதாகச் சொல்கிறார்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளே பல விஷயங்களை தளபதிக்கு தெரியாமல் மறைக்கும் அளவுக்கு இருக்கிறது நிலைமை. அதிகாரிகள் தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் தளபதியின் வருத்தத்திற்கு முக்கிய காரணம். இதையெல்லாம் உள்ளர்த்தமாக வைத்துத்தான் பொதுக்குழுவில் பொங்கிவெடித்து விட்டார்” என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

முதல்வருக்கு உள்ளுக்குள் இத்தனை பிரச்சினைகள் இருக்கிறதா என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டதற்கு, “போவோர் வருவோர் எல்லாம் எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதெற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது“ என்று முடித்துக் கொண்டார் அவர்.

கருணாநிதி இருந்தபோது தனது மனக்குமுறல்களை கொட்ட தனக்கு நெருக்கமான சிலரை அழைத்துப் பேசுவார். அவரின் மனசாட்சியான முரசொலி மாறனை விட்டு கட்சியினரை எச்சரிக்கும் விதமாகப் பேசவைப்பார். அப்படியான மனசாட்சி மனிதர்கள் ஸ்டாலினைச் சுற்றி இல்லாததால் தனது மனவேதனையை தானே கொட்டித் தீர்த்திருக்கிறார். இனியாவது அவருக்கு தர்மசங்கடத்தை உண்டாக்காமல் இருக்கிறார்களா பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in