‘மக்களை சந்திக்க எனக்கு தைரியம் இல்லையா?’ -முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

‘மக்களை சந்திக்க எனக்கு தைரியம் இல்லையா?’ -முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்

தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை சந்திக்க முதல்வருக்கு தைரியம் இல்லை என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

திமுக தலைவரான மு.க.ஸ்டாலின், கட்சியின் துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் என்பவரின் இல்லத் திருமண விழாவில் இன்று(பிப்.20) பங்கேற்றுப் பேசினார். அப்போது தனது பேச்சின் ஊடாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கும் பதில் தந்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆரம்பித்த மு.கஸ்டாலின், “நடந்து முடிந்திருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் நாளை மறுநாள் வரவிருக்கிறது. அது என்ன முடிவு என்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என்றார்.

அடுத்ததாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து பேசிய மு.க.ஸ்டாலின் “தேர்தல் நேரத்தில் காணொலிக் காட்சி வாயிலாக பேசி வந்தேன். மக்களைச் நேரில் சந்திக்க தைரியம் இல்லை என்று என்னைப் பற்றி சிலர் பேசினார்கள். எதற்காக காணொலிக் காட்சியின் மூலமாக பிரச்சாரம் மேற்கொண்டேன்? கரோனா காலமாக இருப்பதால், கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நேரடியாகச் செல்வதை தவிர்த்தேன். தேர்தல் முடிந்து அதனுடைய வெற்றி விழா நடக்கின்ற போது, உறுதியாக அனைத்து மாவட்டங்களுக்கும் நானே நேரடியாக வருவேன்” என்று விளக்கம் அளித்தார்.

மேலும், தன் மீதான தமிழக மக்களின் அக்கறை குறித்து கூறுகையில், “மழைக்காலத்தில் நான் வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு சென்றபோது, ’ஏனப்பா இப்போது வருகிறாய், உடம்பை ஏனப்பா கெடுத்துக் கொள்கிறாய்..’ என்று அக்கறையோடு கேட்கும் நிலையில்தான் என்னிடம் மக்கள் இருக்கிறார்கள்” என்றார்.

Related Stories

No stories found.