`ஓபிஎஸ் உடன் பேசி பல வருடம் ஆகிவிட்டது'- சொல்கிறார் டி.டி.வி.தினகரன்

`ஓபிஎஸ் உடன் பேசி பல வருடம் ஆகிவிட்டது'- சொல்கிறார் டி.டி.வி.தினகரன்

அதிமுகவினர் தன்னோடு  பேசுவதை  அரசியலாக பார்க்க வேண்டாம் என்று  சொல்லும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்,   ஓபிஎஸ் உடன் பேசி பல வருடம்  ஆகிவிட்டது என்கிறார். 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ராதாநரசிம்மபுரம் கிராமத்தில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் மறைந்த ராவணன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அமமுக  பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அங்கு  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,  "நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க கூட்டணி அமைத்தே  நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும்.  பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் சிறு அணில் போல் அமமுக  செயல்படும்.  

அ.தி.மு.க.வினர் என்னோடு பேசுவதை  அரசியலாக பார்க்க வேண்டாம். அரசியல் என்பது வேறு,  பழக்கவழக்கம் என்பது வேறு,  இரண்டையும் குழப்ப வேண்டாம். ஓ.பி.எஸ்சுடன் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டன. திமுக தமிழை வைத்தும்,  வார்த்தை ஜாலத்தாலும் மக்களை ஏமாற்றியும் ஆட்சி நடத்தும் கட்சி. கடந்த 10 ஆண்டுகளாக ஜெயலலிதா கையில் மக்கள் ஆட்சியை ஒப்படைத்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் திருவிளையாடல்களால் தற்போது திமுக மீண்டும் ஆட்சியை பிடித்துவிட்டது.  

எம். ஜி.ஆர் 1989-ல் இறந்த பிறகும், பொய் பிரசாரத்தால் 1996 -ம் ஆண்டு ஜெயலலிதா மீது குற்றம்சாட்டியும்  திமுக ஆட்சிக்கு வந்தது. பின்னர் 2006-ம் ஆண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என திமுக ஆட்சிக்கு வந்தது. தற்போது கலைஞர் கருணாநிதியை போல் பொய்யான வாக்குறுதியை கூறி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துள்ளார்.

என்.ஐ.ஏ சோதனை  நடத்துவது, இந்திய இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகள், ஆயுதங்களை கையகப்படுத்துதல் போன்றவற்றை பார்க்கும்போது தமிழகத்தில் 2024-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பது போல தெரிகிறது" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in