டெண்டர் முறைகேடு வழக்கு: மீண்டும் நிராகரிக்கப்பட்ட எஸ்.பி. வேலுமணியின் கோரிக்கை!

டெண்டர் முறைகேடு வழக்கு: மீண்டும் நிராகரிக்கப்பட்ட எஸ்.பி. வேலுமணியின் கோரிக்கை!

மாநகராட்சி டெண்டர் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக தன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையைத் தடை செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரின் கோரிக்கையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு நடைபெற்ற டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரியும் அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் இதே கோரிக்கையை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை, எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக மற்றொரு வழக்கும் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பதியப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கோரியும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அமர்வில் இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து ஜூலை 18-ம் தேதிக்குள் பதிலளிக்க அறப்போர் இயக்கம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in