`என்னுடைய அம்மாவின் கம்மலை எடுத்துச் சென்றனர்'- சோதனை குறித்து எஸ்.பி.வேலுமணி விளக்கம்

`என்னுடைய அம்மாவின் கம்மலை எடுத்துச் சென்றனர்'- சோதனை குறித்து எஸ்.பி.வேலுமணி விளக்கம்

எங்கள் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறையினர் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளதாக எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். மாலை வரை நடைபெற்ற இந்தச் சோதனைகளுக்குப் பின்னர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மூன்றாவது முறையாக என்னுடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தொடர்ந்து பழிவாங்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இன்றைக்கு நடைபெற்ற சோதனையில் 7,500 ரூபாய் பணம், எங்க அம்மாவின் கம்மல் உள்ளிட்ட சில பொருட்களே அவர்களுக்குக் கிடைத்தன. வேறு எதையும் அவர்கள் கைப்பற்றவில்லை. என்னுடைய வழக்கு எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் நீதியரசர்களுக்கு அழுத்தம் தருவதைப் போல அவர்களது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வார்கள். யார் வீட்டில் ரெய்டு நடந்தாலும், என்னுடைய நண்பர் வீட்டில் ரெய்டு நடந்ததாகக் காண்பிக்கிறார்கள்.

மின்வெட்டு உயர்வை மறைப்பதற்காக தற்போது ரெய்டு நடத்துகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, எங்குப் பார்த்தாலும் கஞ்சாவால் இளைஞர்கள் சீரழிகிறார்கள். அதையெல்லாம் சரிசெய்யாமல் எங்களைப் பழிவாங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டின் போது அவர்களுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். அவர்களும் எங்களிடம் ஒன்றும் இல்லை என எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் இங்கு வந்த வழக்கறிஞர், எம்எல்ஏக்களின் சட்டைகளைக் கிழித்து காவல்துறையினர் அடக்குமுறையை கையாள்கிறார்கள்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in