அண்ணாமலை குறித்து அவதூறு பரப்புகிறார்கள்: சென்னை காவல் ஆணையரிடம் பாஜக சார்பில் புகார்

அண்ணாமலை குறித்து அவதூறு பரப்புகிறார்கள்: சென்னை காவல் ஆணையரிடம் பாஜக சார்பில் புகார்

தமிழக பாஜக மற்றும் அதன் மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறு பரப்பும் வகையில் தனியார் பத்திரிகை பெயரில் போலியாக அட்டைப்படம் தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் பால் கனகராஜ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மாநிலத் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியார்களை சந்தித்த நிர்மல் குமார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து உண்மைக்கு புறம்பான பல கருத்துக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். குறிப்பாக பிரபல தனியார் பத்திரிக்கை பெயரில் போலியான அட்டைப்பக்கத்தை தயாரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துக்களை, அதன் மூலம் பரப்பி வருவதாக தெரிவித்தார். அண்ணாமலை பாஜக மத்திய அமைச்சர்களில் ஒரு முக்கிய புள்ளிக்காக 5000 கோடி ரூபாயை அமெரிக்காவில் முதலீடு செய்யும் அசைன்மெண்டுக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக போலி பத்திரிகை அட்டைப்படம் மூலம் அவதூறு பரப்பி வருவதாக தெரிவித்த அவர், இந்த அட்டைப்படத்தின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வரும் 16 நபர்களின் பட்டியலை எடுத்து புகாருடன் இணைத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸாரிடம் இன்று புகார் அளித்துள்ளதாக கூறினார்.

ஏற்கெனவே பாஜக குறித்தும், மாநில தலைவர் அண்ணாமலை குறித்தும் அவதூறு பரப்பும் நபர்கள் குறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட நபர்களின் சமூக வலைதளப் பக்கத்தை முடக்கி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், தங்களுக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்ள தமிழக பாஜக தயக்கம் காட்டவில்லை எனவும், அரசியல் ரீதியிலான எதிர்மறை கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை பிரதான எதிர்கட்சி என்ற முறையில் தாங்கள் முன்வைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in