மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் சிலை திறப்பு விழா மற்றும் நினைவு மலர் வெளியீடு இன்று(டிச.26) சென்னையில் நடைபெற்றது.
சென்னை அடையாறில் நடைபெற்ற விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, “கம்யூனிசத்தை வாழ்க்கையிலும் தனது செயல்பாடுகளிலும் காட்டியவர் இயக்குநர் ஜனநாதன். கம்யூனிசத்தை எவர் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் வாழ்க்கையில் பின்பற்றினால்தான் பிடிப்பு ஏற்படும். அவரது கடைசி படத்தை தயாரித்தது, என் வாழ்வில் நான் செய்த புண்ணியம். அந்த திரைப்படமே அவரது கடைசி படமாக அமைந்தது, சாபம்” என்றார்.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, “வணிக நோக்கம் கொண்ட சினிமாவில் தத்துவங்களை பேசுவது கடினமானது. அதிலும் கட்சிகளை அடையாளப்படுத்தாமல் தத்துவத்தை முன்னிறுத்தினார் இயக்குநர் ஜனநாதன்” என்றார்.
எஸ்.பி.ஜனநாதனின் முழு உருவச்சிலையை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் சங்கரைய்யா காணொலி வாயிலாக திறந்து வைத்தார். கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் நல்லக்கண்ணு, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர். எஸ்.பி.ஜனநாதனின் நினைவைப் போற்றும் வகையில் ’சினிமாவில் பறந்த சிவப்புக்கொடி’ என்ற மலரும் விழாவில் வெளியிடப்பட்டது.