ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநரிடம் விசாரணை: கோடநாடு வழக்கில் தனிப்படை அடுத்த கட்டம் தீவிரம்

குணசேகரன்
குணசேகரன்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் குணசேகரன் என்பவரிடம் இன்று தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்போது மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

அதில், கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான லாஜி வோரோ எனோவட்டிடமும் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கண்ணன் விசாரிக்கப்பட்டார். இந்நிலையில் ஜெயலலிதாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக பணிபுரிந்த குணசேகரன் என்பவரிடம் தனிப்படை இன்று விசாரணை நடத்தி வருகிறது.

மன்னார்குடி சேரங்குளத்தை சேர்ந்த குணசேகரனை கோவையில் தனிப்படை போலீஸார் விசாரிக்கின்றனர். இதற்காக அவருக்கு முன்பே அழைப்பு அனுப்பப்பட்டு, இன்று காலை 9 மணி அளவில் கோவையில் தனிப்படை போலீஸாரிடம் அவர் ஆஜரானார்.

இந்த குணசேகரன் அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதாவின் வாகனத்தை சிறிது காலம் ஓட்டியிருக்கிறார். அப்போது அடிக்கடி கோடநாடு எஸ்டேட்டுக்கும் அவர் சென்று வந்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் தெரிய வந்திருக்கிறது. அத்துடன் முதல்வர் அலுவலகத்துக்காக தனியார் நிறுவன வாகனத்தையும் ஓட்டியிருக்கிறார். குறிப்பாக இந்த வழக்கில் தொடர்புடையவரும், விபத்தில் இறந்து போனவருமான கனகராஜ் குறித்து குணசேகரனிடம் விசாரணை நடத்தப்படுவதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in