அமுல் வந்தாலும் ஆவின் அதைச் சமாளிக்கும்!

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

பால்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதில் இருந்து பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். ஆவின் குடிநீர், அமுல் விவகாரம், பால்பண்ணைகள் மூடல், பிரதமர் மோடி குறித்த சர்ச்சை ட்விட் என அவரைச் சுற்றி பரபர சர்ச்சைகளும் வட்டமடிக்கும் நிலையில், காமதேனுவுக்காக அவரியம் பேசினோம். இனி, அவரது பேட்டி...

புதிய இலாக்கா பொறுப்புகள் எப்படி இருக்கின்றன?

சில குறைகள் இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது. சில மாற்றங்களைச் செய்துக் கொண்டிருக்கிறோம். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தீபாவளிக்கு முன்பாகவே வியத்தகு பல மாற்றங்களை நீங்கள் பார்ப்பீர்கள்.


ஆவின் நிர்வாகம் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், நஷ்டத்தில் இயங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளதே?


அதில் துளியும் உண்மையில்லை. இப்படியான தகவல்களை யார் பரபரப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் ஆவின் ஒரு தலைசிறந்த நிறுவனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்த ஆண்டு பால் கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தற்போது நாளொன்றுக்கு 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ளது. அதை இந்த ஆண்டு 75 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இதற்காக உலகத்தரம் வாய்ந்த எந்திரங்களை பயன்படுத்த உள்ளோம். பணியாளர்கள் பற்றாக்குறை இருந்தது உண்மை. தற்போது அதையும் சரி செய்துள்ளோம். அதேபோல், கொள்முதலில் சற்று சுணக்கம் இருந்தது. அதை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஆவின் நஷ்டத்தில் இயங்குகிறது என்பது தவறான தகவல்.

‘ஆவின் வாட்டர்’ திட்டம் கைவிடப்பட்டதா?

தற்போதைக்கு மற்ற திட்டங்களில் கவனம் செலுத்தவுள்ளதால் அந்தத் திட்டம் தற்போதைக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். வரும் காலங்களில், ஆவின் வாட்டர் தேவையா என்பது குறித்து முதல்வரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அமுல்- ஆவின்
அமுல்- ஆவின்

குஜராத்தின் அமுல் நிறுவனம் தமிழகத்தில் நேரடியாக பால் கொள்முதலில் இறங்குவது ஆவினுக்கு ஆபத்து என்கிறார்களே.. ?

அமுல் வந்தாலும் ஆவின் அதைச் சமாளிக்கும். தமிழகத்தில் அமுல் நிறுவனம் தொடங்குவது தொடர்பாக குஜராத் அரசு எதுவும் பேசவில்லை. பொதுவாக ஒவ்வொரு மாநில பால் கூட்டுறவு சங்கங்களும் அவர்களது எல்லையை மீறாமல் செயல்பட்டு வருகின்றன. பால் உற்பத்தி பகுதியில் மாநிலங்கள் இடையே விதிமீறல் ஏற்படக்கூடாது.

தற்போது அமுல் நிறுவனம் தமிழகத்திற்குள் வருவது பால் உற்பத்தி பகுதியை மீறுகின்ற செயல்போல தெரிகிறது, எனவே, தான் 2 விஷயங்களை கூறி முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அமுல் நிறுவனம் கொள்முதல் விலையை உயர்த்தித் தருவதாகக் கூறுகிறார்கள். ஆனால், ஆவினில் பால் உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு சாதகமான விஷயங்களை நாங்கள் செய்து வருகிறோம்.

மாடுகளுக்கு காப்பீடு உள்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 1 லட்சம் மாடுகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அனைத்து மாடுகளுக்கும் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து ஈபிஎஸ்ஸின் விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அரசியல் காரணங்களுக்காக அவர் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். வெளிநாட்டுகளுக்குச் சென்று பல்வேறு சிறந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதல்வர் போட்டுள்ளார். அதன் பலன் நமக்குத் தெரிய நாட்கள் பிடிக்கும். அதற்குள் விமர்சனங்களை அள்ளி வீசினால் எப்படி ஏற்க முடியும்? ஏதாவது அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக, தொட்டதுக்கெல்லாம் குற்றம் செல்வது சரியாக இருக்குமா என்பதை எதிர்க்கட்சிகள் தான் யோசிக்க வேண்டும்.

பிரதமர் மோடி குறித்து நீங்கள் போட்ட ட்விட் பாஜக மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எதற்காக அந்த ட்விட்டை நீக்கினீர்கள்?

ஜனநாயக நாட்டில் நம்முடைய கருத்துகளை சொல்வதற்கு உரிமை உண்டு. அதை ஏன் பாஜகவினர் இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டார்கள் என எனக்கு தெரியவில்லை. பிரதமர் குறித்து நான் போட்ட பதிவை அவர்கள் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்த நினைத்தார்கள் என்பதால் தான் நான் அந்தப் பதிவை நீக்கினேன். யாருக்காகவும் எதற்காகவும் நான் பயப்பட வேண்டிய அவசியமில்லை. என்னைப்பற்றி என்னுடைய தலைமைக்கு நன்கு தெரியும். நான் அந்த ட்விட்டை டெலிட் செய்ததால் அவர்களின் நோக்கம் நிறைவேறாமல் போய்விட்டது.


கன்னியாகுமரியில் மாற்று மதத்தினர் கோயில் தேரை வடம் பிடித்து இழுக்கக்கூடாது என பாஜக போர்க்கொடி தூக்கியிருப்பது பற்றி..?

அவர்கள் மத ரீதியிலான அரசியல் மட்டுமே செய்கிறார்கள். அனைவரும் சமம் என்பதால் தான் நாங்கள் கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறோம். பாஜகவின் போலியான முகம் பொதுமக்களுக்குத் தெரிய வேண்டும். இதுவரை இந்துக்கள் இங்கே கண்டுகொள்ளப்படாமல் இருந்தார்கள். நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தான் இங்கு இருக்கக்கூடிய பல கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது.

ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடந்திருக்கிறது. கன்னியாகுமரியில் பாஜகவினர் ஜூலை போராட்டம் என்ற ஒன்றை ஆண்டுதோறும் நடத்தினார்கள். அது தொடர்பான பிரச்சினையைக் களைந்து ஜூலை போராட்டத்துக்கு வழியில்லாமல் செய்துள்ளோம். அந்த வெறுப்பில் பாஜகவினர் ஏதேதோ பேசி வருகிறார்கள். ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கும் அவர்கள், அவதூறுகளையும் பிரச்சினைகளையும் உருவாக்கி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in