'எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் உதயநிதி எங்களிடமிருந்து தப்ப முடியாது'... அயோத்தி சாமியார் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா
ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா

சனாதன விமர்சனத்திற்கு உதயநிதி மன்னிப்பு கேட்கவில்லையெனில், அவருக்கு எவ்வளவு பாதுகாப்பு அளித்தாலும் எங்களிடமிருந்து தப்ப முடியாது என அயோத்தி துறவியான ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா சவால் விடுத்துள்ளார்.

ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா
ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா

உத்தரப்பிரதேச புனிதநகரின் தபஸ்வீ மடத்தின் தலைவரான அயோத்தி துறவியான ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியாவிடம் ‘காமதேனு’ இணையதளத்திற்காக எழுப்பியக் கேள்விகளுக்கு அவர் பரபரப்பான பதில்களை அளித்துள்ளார்.

மீண்டும் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்திற்கு எதிராகப் பேசியுள்ளாரே?

இதுவே மற்ற மதங்களை உதயநிதி விமர்சித்திருந்தால் அவர் இன்று என்னவாகி இருப்பாரோ தெரியவில்லை. பாஜகவின் தலைவர் நுபுர் சர்மா, இஸ்லாமியர்களின் ஹதீஸ் மறையில் இருப்பதைத்தான் எடுத்துரைத்திருந்தார். ஆனால், அவருக்கு கிளம்பிய எதிர்ப்பால், பாஜக நுபுரை கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது. உதயநிதி மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

சனாதனம் மீது எழுந்த விமர்சனத்திற்கு எவருக்கும் வராத கோபம் உங்களுக்கு மட்டும் வந்தது ஏன்?

தன் தவறை உணர்ந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி மன்னிப்பு கேட்டு விடுவார் என எதிர்பார்த்தேன். இதை அவர் செய்யாததால்தான் நான் அவரது தலையைக் கொய்பவருக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்தேன். இதற்கு பின்பும் அவர் தன் தலையைச் சீவ 10 கோடி அல்ல 10- ரூபாய் சீப்பு போதுமானது என உதயநிதி கிண்டலடித்தார்.

இதனால், நான் இருதினங்களுக்கு முன் ஆயிரக்கணக்கான ஆச்சாரியார்கள் கொண்ட தர்மசபை கூட்டி ஆலோசனை செய்தேன். இதில் உதயநிதி தன் வார்த்தைகளை வாபஸ் பெற்றால் நாமும் நம் எச்சரிக்கையை வாபஸ் பெற்றுக் கொள்வோம். இல்லையெனில் அதல பாதாளத்தில் ஒளிந்திருந்தாலும் அவர் எங்களிடமிருந்து தப்ப முடியாது. உதயநிதிக்கு எவ்வளவு பாதுகாப்பு அளித்தாலும் தப்ப முடியாது. அவர் தலையைக் கொய்ய நான் அறிவித்த ரூ.10 கோடியை ரூ.25 கோடியாக உயர்த்தி தற்போது அறிவித்துள்ளேன்.

ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா
ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா

ஒரு துறவியான உங்களுக்கு இந்த அளவிற்கு கோபம் வரலாமா? இதை நீங்கள் அமைதி வழியில், சட்டப்படி உதயநிதிக்கு உணர்த்தியிருக்கலாமே?

சீதையைத் தூக்கிச் சென்றது தவறு என ராவணனுக்கு புரிந்திருந்தால் அவரை ராமர் கொன்றிருக்க மாட்டார். இன்னும் கூட எங்கள் மனதில் உதயநிதி மீது தயவு உள்ளது. அவர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு திருந்த நாம் விரும்புகிறோம்.

சனாதனத்தின் மீது நம்பிக்கை இல்லை எனில் உதயநிதி வேறு மதத்திற்கு மாறிக் கொள்ளலாம். இதைவிடுத்து அவர் சனாதனத்தை ஒழிப்பேன் எனக் கூறுவது அசாம்பாவிதம் ஆகும், இது உலகம் முழுவதிலும் அமைதியை குலைக்கும் செயலாகும். இவருக்குப் பின் ஆ.ராசா உள்பட பலரும் இதேபோன்று விமர்சிப்பது தவறு.

இதுபோல், உ.பி மீரட்டின் அரசியல் தலைவரான ஹாஜி யாக்கூப் குரைஷியும் இஸ்லாம் குறித்து தவறாகப் பேசுவோர் தலையைக் கொய்து வந்தால் பரிசு என்று அறிவித்தார். அப்போது அவர் அறிவிப்பது தவறு என்ற பேச்சு வந்தது. இப்போது நீங்களும் அதே தவறைத்தானே செய்கிறீர்கள்?

குரைஷி போன்றவர்களை ஆதரிப்பவன் அல்ல நான். அதேசமயம், ஒருவருடைய நம்பிக்கைக்கு எதிராக விமர்சிப்பது கண்டிக்கக் கூடியது. பாரதத்தில் சனாதனத்தை மதித்து அதன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இந்தியாவில் சுமார் சுமார் 120 கோடி உள்ளனர். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் சனாதனம் மட்டுமே இருந்தது வேறு எந்த மதங்களும் இல்லை. இதன் குறிப்பு பழம்பெருமை வாய்ந்த ஆன்மிக நூலான ரிக்வேதத்திலும் உள்ளது. சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர் அதை மதிக்கும் நாட்டின் 80 சதவீதத்தினரையும் அழிக்க முயல்வதாகவே அர்த்தம்.

உங்கள் மீது பதிவான வழக்கின் விசாரணை நிலை என்ன? தமிழக காவல்துறை அழைத்தால் நீங்கள் தமிழகம் வருவீர்களா?

கண்டிப்பாக வருவேன். ஏனெனில், நாம் சட்டத்தை மதிப்பவர்கள். இதற்குமுன்பாக, சனாதனத்தை விமர்சித்த உதயநிதி மீது முதலில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவருக்குப் பதில் அளிக்கும் வகையில் தானே நம் நடவடிக்கை இருந்தது. என் மீதான வழக்கில் எனக்கு இன்னும் நோட்டீஸ் கூட வரவில்லை. எனது கொடும்பாவி எரித்ததுடன் என் மீது வழக்குகள் பதிவு செய்திருப்பதும் எனக்குத் தெரியும். என் தலைக்கும் யாரோ ரூ.100 கோடி பரிசு அறிவித்திருப்பதும் எனக்குத் தெரியும்.

ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா
ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா

உதயநிதி இந்த சனாதன அழிப்புப் பேச்சு மூலம் அதன் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தி பாஜக போன்ற கட்சிகளுக்கு உதவி உள்ளார் எனக்கூற முடியுமா?

இப்பிரச்சினையில், அரசியல் லாபம் யாருக்கு, அரசியல் கட்சிகள் செய்வது என்ன போன்றவை குறித்து எனக்கு கவலை இல்லை. உ.பியில் ஷியா வஃக்பு வாரியத்தின் முன்னாள் தலைவரான வசீம் ரிஜ்வீ, இஸ்லாமியர்கள் மறை நூலில் தீவிரவாதத்தைத் தூண்டும் வகையில் சில வரிகள் இடம்பெற்றதாகவும், அதை நீக்க வேண்டும் எனவும் வழக்குத் தொடுத்திருந்தார். இதை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் ரிஜ்விக்கு ரூ.50,000 அபராதமும் விதித்திருந்தது. இதுபோல், இதர மதங்கள் விவகாரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் சனாதனம் குறித்து அவதூறாகப் பேசுவோர் மீது எடுக்கப்படுவதில்லை.

ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா
ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா

இதற்குமுன் ராமரை விமர்சித்ததாகக் கலைஞர் கருணாநிதியின் தலையைக் கொய்ய வேண்டும் என அயோத்தி துறவியும், பாஜகவின் முன்னாள் எம்.பியுமான ராம்விலாஸ் வேதாந்தி எச்சரித்தார். இப்போது நீங்களும் அப்படி கூறுவதால் உங்கள் போன்ற துறவிகளைத் தீவிரவாதிகள் வரிசையில் சேர்க்கலாமா?

சனாதனத்தை உதயநிதி விமர்சிப்பதற்கு முன் நாம் அவரது தலையை வெட்டுவதாகக் கூறியிருந்தால் நம்மை தீவிரவாதிகள் எனக் கூறுவது பொருத்தம். ஆனால், நாம் அவரது செயலுக்கு எதிர்வினையாக இதை கூறியதால் நாம் தூய சனாதனிகளே. உதாரணமாக, தன் கண்முன்னே மகளது பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க ஒரு தந்தை ஆயுதம் எடுத்தால் அவர் மீது தவறு இல்லை. அதேசமயம், ஒரு நிரபராதியை யாரேனும் தாக்கினால் அவர் தண்டனைக்குரியவர்.

கடவுள் ராமர், ராவணனைக் கொன்றதால் அவர் என்ன கொலையாளியா? இதேபோல், கம்ஸனை வதம் செய்த பகவான் கிருஷ்ணனும் கொலையாளி இல்லை. மாதா சக்தி, மஹிஷாசுரனைக் குத்திக் கொன்றது கொலையா? தீவிரவாதிகளைக் கொல்லும் நமது ராணுவத்தினர் கொலைகாரர்களா?

இதற்கு முன் ராமரை விமர்சித்த சமாஜ்வாதி தலைவர் ’சுவாமி பிரசாத் மவுரியாவின் தலைக்கும் பரிசு அறிவித்தீர்கள். எனவே, இதுபோன்ற விமர்சனங்களை ஜனநாயக நாட்டில் தடுப்பது சாத்தியமல்ல என இப்போதாவது ஏற்றுக் கொள்கிறீர்களா?

தடுப்பது சாத்தியம்தான். நாம் இந்து என்பதை கர்வத்துடன் கூறுங்கள் என சுவாமி விவேகானந்தர் கூறியிருந்தார். இந்த இந்து என்பதன் அர்த்தம் மனிதநேயம், இந்து தர்மம் மற்றும் சனாதன தர்மம் இரண்டும் இணைச்சொற்களே. நீர் மற்றும் ஜலம் என்பது ஒன்றுதான் என்பதை அறியாதவர்களே இதுபோல் விமர்சனங்களை எழுப்புகின்றனர். மவுரியா கூறியது தவறு எனவும் கண்டிப்பதாகவும் அவரது கட்சி தலைவர் அகிலேஷ்சிங் யாதவும், மனைவி டிம்பிள் யாதவ் எம்.பியும் தெரிவித்திருந்தனர். இதுபோன்றவைகளில் எவருக்கும் ஐயங்கள் எழுந்தால் அதன் மீது கூட்டங்கள் நடத்தி விவாதிக்க வேண்டும்.

சனாதனம் பற்றி பேசத் துணிபவர்கள், அக்கூட்டங்களில் குர்ஆன், பைபிள் போன்ற இதர மறை நூல்கள் மீதும் தவறாமல் விவாதம் நடத்த வேண்டும். அப்போது தெரியும், யாருக்கு சகிப்புத்தன்மையும், சகோதரத்துவமும் அதிகம் என்று.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in