புரட்சித்தலைவர், அம்மாவுடன் எடப்பாடியாரை ஒப்பிடுவதில் என்ன தப்பு? - பா.வளர்மதி பளிச் பேட்டி

புரட்சித்தலைவர், அம்மாவுடன் எடப்பாடியாரை ஒப்பிடுவதில் என்ன தப்பு? - பா.வளர்மதி பளிச் பேட்டி

அண்மையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, “புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மாவுக்குப் பிறகு ஒற்றை தலைமையாக எடப்பாடியார் உருவெடுத்துள்ளார். எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு இணையாக ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தக்கூடிய தன்னிகரற்ற தலைவராக அவர் திகழ்கிறார்” எனப் பேசி இருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் எடப்பாடியாரை ஒப்பிடுவது சரியல்ல” என்று ரியாக்ட் செய்தார்கள். இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி குறித்து எனக்குத் தெரிந்த ரகசியங்களைச் சொன்னால் அவர் திஹார் சிறைக்குப் போக வேண்டும்” என்று மிரட்டினார் ஓபிஎஸ். “இது தொடர்பாகவெல்லாம் பேசவேண்டுமே...” என முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியிடம் கேட்டோம். “ஓ... நல்லா பேசலாமே...” என பேட்டியை அவரே ஆரம்பித்தார்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் எடப்பாடியாரை ஒப்பிட்டுப் பேசுவது தவறு என்கிறார்களே..?

யார் சொன்னது தவறு என்று... புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திமுகவை எதிர்த்து இந்த இயக்கத்தை தொடங்கினார். தொடர்ந்து திமுகவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். அவரது மறைவுக்குப் பின்னால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிளவுபட்டு இருந்த அதிமுகவை ஒன்றிணைத்து வீறுநடை போட்டு நடக்க வைத்தார். அவரது வழியில் எதிரிகளிடமிருந்தும் துரோகிகளின் சூழ்ச்சிகளில் இருந்தும் இந்த இயக்கத்தை மீட்டெடுத்து எங்களை எல்லாம் வழிநடத்தி வருகிறார் எடப்பாடியார்.

எத்தனை வழக்குகள்... எத்தனை சூழ்ச்சிகள். அம்மா அவர்கள் கூட சந்திக்காத சோதனைகளை எடப்பாடியார் சந்தித்தார். அனைத்தையும் எதிர்க்கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா வழியில் இந்த இயக்கத்தை வழிநடத்தக் கூடிய ஒற்றை தலைமையாக காலம் தந்த கொடையாக உருவெடுத்துள்ளார் எடப்பாடியார்.

இதை உணராமல் பேசுபவர்கள் பேசிவிட்டுப் போகட்டும். அவர்களுக்கெல்லாம் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக தக்க நேரத்தில் பதிலடி கொடுக்கும். என்னைப் பொறுத்தவரை எம்ஜிஆர், அம்மா ஆகியோருடன் எடப்பாடியாரை ஒப்பிடுவது தப்பே கிடையாது.

ஆனால், எடப்பாடியார் தலைமையின் கீழ் கட்சி வந்த பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறதே அதிமுக?

வெற்றி தோல்வி என்பது அரசியலில் சகஜமான ஒன்று. புரட்சித்தலைவி அம்மா பார்க்காத தோல்விகள் கிடையாது. ஆனால் அந்த தோல்விகளை வெற்றிப் படிக்கட்டாக மாற்றி இந்த இயக்கத்தை பலப்படுத்தினார். திமுக சந்திக்காத தோல்விகள் கிடையாது. அவர்கள் இன்றைக்கு விபத்தால் அரியணை ஏறவில்லையா? அதேபோலத்தான் எடப்பாடியாரும் அடுத்து வரக்கூடிய மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று இந்த இயக்கத்தை மென்மேலும் வலிமைப்படுத்துவார்.

கடந்த தேர்தலில் இந்த இயக்கத்தில் இருந்துகொண்டே திமுகவுக்கும் எதிரிகளுக்கும் வேலைபார்த்த பச்சோந்திகளால் இந்த இயக்கம் தோல்வி கண்டது. தற்போது பச்சோந்திகள், துரோகிகள் நீக்கப்பட்டு தெளிந்த நீரோடையாக எடப்பாடியார் தலைமையிலான அதிமுக மாறியுள்ளது. அதனால் எங்களுக்கு இனி தோல்வி கிடையாது.

இப்போதுள்ள சூழலில் 40 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றுவது சாத்தியப்படுமா?

மக்களவை தேர்தல் மட்டுமல்ல அதோடு இணைந்து சட்டமன்றத் தேர்தலும் வரக்கூடும் என்பதுதான் என்னுடைய அனுமானம். அப்படி நடந்தால் மக்களவை தேர்தலில் மட்டுமல்ல... சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று எடப்பாடியார் மீண்டும் முதல்வர் அரியணையில் அமருவார். எப்படி சாத்தியப்படும் என சொல்கிறேன் கேளுங்கள்... திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

சென்னையை மழை வெள்ளம் புரட்டிப்போட்ட போது, முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வெள்ளப் பாதிப்புகளைத் தடுத்திருக்க முடியும். 2015-லும் வெள்ளம் வந்தது. அப்போது புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எங்களுக்கெல்லாம் உத்தரவிட்டு களத்துக்கு அனுப்பினார். அப்போது யாராவது பால் கிடைக்கவில்லை, பால் பவுடர் கிடைக்கவில்லை, சாப்பிட எதுவும் இல்லை என தெருவில் நின்றார்களா? இல்லையே.

ஆனால், இப்போது திமுக ஆட்சியில் வெள்ளத்தில் தத்தளித்த மக்களைக் காப்பாற்ற படகுக்கு 2,500 ரூபாய் கேட்ட அவலத்தை எல்லாம் நாம் பார்த்தோமே. பலர் உணவுக்காகவும், பாலுக்காகவும் தெருவில் கையேந்தி நின்றார்கள். இந்த ரணமெல்லாம் அவ்வளவு எளிதாக மக்கள் மனதைவிட்டு அகலாது.

அண்ணன் எடப்பாடியார் காலத்திலும் மழை வெள்ளப் பாதிப்புகள் இருந்தது. அதனை முறையாக கையாண்டோம் அதனால் மக்கள் பாதுகாக்கப்பட்டார்கள். ஆனால், இன்றைக்கு மக்கள் தங்களது உடைமைகளை இழந்து நடுத்தெருவில் நிற்கும் நிலையை தான் திமுக ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான் சொல்கிறேன்... அதிமுக மீண்டும் அரியணை ஏறுவது நிச்சயம் என்று.

சென்னை  மழை வெள்ளம்
சென்னை மழை வெள்ளம்

சென்னை மழை வெள்ளப் பாதிப்புக்கு அதிமுக தான் காரணம் என்கிறார்களே திமுகவினர்?

திமுகவிடமிருந்து வேறு என்ன பதிலை நாம் எதிர்பார்க்க முடியும். அதிமுக சரியில்லை என்று தானே இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மலையைப் புரட்டிப்போட்டு விடுவோம்” என்றெல்லாம் மக்களை நம்பவைத்து ஏமாற்றித்தான் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்கள் மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்தது தான் மிச்சம்.

அதிமுக ஆட்சியில் போடப்பட்ட மழைநீர் வடிகால்களைத் தான் இவர்கள் சீர் செய்கிறோம் என்ற பெயரில், அதையும் சீர் செய்யாமல் ரூ.4,000 கோடியை வீணடித்தார்கள். அதற்கான பதிலை இவர்களால் கூற முடியாததால் அதிமுக மீது வீண் பழியைப் போட்டு தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள். யார் நல்லவர்கள், யார் நமக்காக பணியாற்றினார்கள் என்பதை எல்லாம் மக்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள். நிச்சயம் இது வரும் தேர்தலில் எதிரொலிக்கும்.

தனக்குத் தெரிந்த ரகசியங்களை வெளியில் சொன்னால் பழனிசாமி திஹார் சிறைக்கு செல்வார் என்கிறாரே ஓபிஎஸ்..?

அவரால் வேறு என்ன சொல்ல முடியும். இரண்டரை வருடங்களாக புலி வருது... புலி வருது என்கிறார். வந்ததா? இல்லையே. அவருக்கு இப்பத்தான் இந்த ரகசியங்கள் ஞாபகம் வந்ததா? தர்மயுத்தம் என்ற பெயரில் போலி யுத்தம் நடத்தி திமுகவோடு கைகோர்த்து இந்த இயக்கத்தைக் கூறு போட நினைத்தவருக்கு எடப்பாடியார் தக்க பாடம் புகட்டினார்.

அதனால் இவர் இப்போது புதிய கட்டுக்கதைகளை மக்கள் மத்தியில் சொல்லி குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார். ஐந்து வருடங்கள் எனக்கு இந்தப் பதவி தான் வேண்டும் என்று அடம்பிடித்து அரியணையில் இருந்தபோது அவருக்கு இந்த ரகசியங்கள் எல்லாம் தெரியவில்லையா? அல்லது வெளியே சொல்லத் தோன்றவில்லையா?

ரகசியங்களை வெளியே சொல்லுவேன் என மிரட்டுவது புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும், அதிமுக என்ற மாபெரும் இயக்கத்திற்கும் செய்யும் துரோகம் இல்லையா? இது வெட்கக் கேடனான செயல். 2 கோடி தொண்டர்களின் விருப்பப்படி இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்து இருக்கிறார்.

அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக எடப்பாடியார் முதல்வர் அரியணையில் ஏறிவிடுவார் என்பதால் திமுகவுடன் கைகோத்துக்கொண்டு, ரகசியங்கள் இருக்கிறது என்று புலம்பி வருகிறார் ஓபிஎஸ். தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும், தன்னிடம் இருக்கும் 5 பேரை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி எதையாவது உளறி வருகிறார். அதைப்பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை.

திறந்த மனதுடன் மற்றவர்களை அரவணைக்கும் அதிமுக, சசிகலா உள்ளிட்டவர்களுக்கு மட்டும் கேட் போடுவது ஏன்?

அதனை தலைமைக் கழக நிர்வாகிகளும், எங்களது எடப்பாடியாரும்தான் முடிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே எங்களது பொதுச்செயலாளர், ஒரு சிலரைத் தவிர இந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இந்த இயக்கத்திற்கு வந்தால் அவர்களுக்கு தக்க மரியாதை அளிக்கப்படும் என்று சொன்னார்.

அதன்படி தாய்க் கழகத்திற்கு திரும்பியவர்களுக்கு தக்க மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை அனைவரும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் எடப்பாடியார் தலைமையை ஏற்று, தலைமை விரும்பினால் யார் வேண்டுமானாலும் வரலாம். ஒரு சிலரைத் தவிர. அதில் நீங்கள் குறிப்பிட்ட நபர் இருக்கிறாரா... இல்லையா? என்பது எனக்குத் தெரியாது.

அதிமுக தலைமையகம்
அதிமுக தலைமையகம்

அதிமுகவின் சொத்துக்கள் சூறையாடப்படுவதாக முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட பலரும் குற்றம் சாட்டுகிறார்களே?

அதிமுக என்பது மாபெரும் இயக்கம். அது எங்களுக்கு கோயில் போன்றது. அந்த இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்க நினைப்பவர்கள் அதற்கான பலனை நிச்சயம் அனுபவிப்பார்கள். போகிற போக்கில் பொத்தாம் பொதுவாக, சூறையாடப் படுகிறது... ஊழல் செய்கிறார்கள் என்றெல்லாம் புலம்புவதை விட்டுவிட்டு யார் என்ன செய்தார்கள் என்பதை ஆதாரத்துடன் வெளியிட வேண்டும்.

உண்மையில் இவர்களிடம் ஆதாரம் எதுவும் கிடையாது. ஆனாலும் இந்த இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதனை செய்கிறார்கள். பொதுக்குழுவில் கட்சியின் வரவு - செலவு கணக்கு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் அண்ணன் திண்டுக்கல் சீனிவாசன் தான் தற்பொழுது பொருளாளராக இருக்கிறார். தலைமை கழக நிர்வாகிகள் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் தாண்டி, “அதிமுக சொத்துக்கள் சூறையாடப்படுகிறது... கட்சிக்குள் ஊழல் செய்கிறார்கள்” என்றெல்லாம் ஒருவர் பேசுவார் என்றால் அவர் எந்தளவுக்கு மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது தெரிகிறது. இவரெல்லாம் இங்கு இருக்க வேண்டிய ஆளே கிடையாது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in