திமுகவில் பிளவு ஏற்படுமா என்பதை ஸ்டாலினும் காலமும் தான் முடிவுசெய்ய வேண்டும்! - வானதி சீனிவாசன் பேட்டி

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பாஜக எம்எல்ஏ-க்களில் எதைக் கேட்டாலும் பளிச் பட்டென பதில்சொல்லக் கூடியவர் பாஜக மகளிரணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன். அவரது வாதங்கள் அரசியலாக மட்டுமல்லாது அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். எதிர்க்கட்சிகளை பாஜக உடைக்கிறது என்ற விமர்சனம், கூட்டணிக்குள் இருந்துகொண்டே பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் அதிமுக, திமுக எம்எல்ஏ-க்கள் குறித்த விமர்சனங்கள் உள்ளிட்டவை குறித்து அவரிடம் பேசினோம். இனி அவரது பேட்டி...

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பொது சிவில் சட்டத்தை ஒட்டுமொத்தமாக அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்க்கின்றனவே..?

பொது சிவில் சட்டம் என்பது எல்லா மதத்துக்கும் ஒரு பொதுவான சட்டம். அது அம்பேத்கர் அவர்களால் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட ஒரு சரத்து. அம்பேத்கர் மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் உருவாக்கி வைத்த ஒன்று. இப்போது புதிதாக பாஜகவோ அல்லது பிரதமர் மோடி அவர்களோ சொன்னது அல்ல. இன்றளவும் பல்வேறு மதங்களில் உள்ள தனிப்பட்ட சட்டங்களில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவது வழக்கத்தில் இருக்கிறது.

இதனையெல்லாம் களையவேண்டும் என்றால் சீர்திருத்தத்துடன் கூடிய ஒரு பொதுவான சிவில் சட்டம் தேவைப்படுகிறது. அதை நோக்கியே இந்த நகர்வுகள் இருக்கிறது. இதனை அரசியலாக்க வேண்டுமென்று அவர்கள் செயல்படலாம் அதேசமயம் இந்த சட்டம் குறித்து, ஆழ்ந்த விவாதத்தை முன்னெடுக்கவும் பாஜக தயாராக உள்ளது.

உங்களின் கூட்டணி தோழனான அதிமுகவும் எதிர்க்கிறதே..?

எனக்கு எந்தத் தகவலும் தெரியவில்லை. ஏன் எதிர்க்கிறார்கள் என்று விரிவான அறிக்கை வரட்டும் பின் அதுகுறித்துப் பேசலாம். பொது சிவில் சட்டம் நாட்டுக்குத் தேவையான ஒன்று. ஆழ்ந்த விவாதங்கள் மூலமாகவே அந்தச் சட்டம் குறித்த புரிதல் அனைவருக்கும் ஏற்படும்.

இத்தனைக்குப் பிறகும் எதிர்க்கட்சிகளை உடைத்துத்தான் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறதா பாஜக?

அரசியல் கட்சிகளில் எங்கெல்லாம் ஜனநாயகத்திற்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறதோ, குடும்ப அரசியல், வாரிசு அரசியல் நடக்கிறதோ அங்கெல்லாம் உள்ளவர்கள் வாய்ப்புகளைத் தேடி பாஜகவுக்கு வருகிறார்கள். பல கடசிகளில் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படுவதால் அதை சகிக்க முடியாமல் பாஜகவை நோக்கி வருகிறார்கள். அவர்களை பாஜக அரவணைத்துக் கொள்கிறது. அவர்களுக்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் வாய்ப்புகளை பாஜக வழங்குகிறது. நாங்கள் யாரையும் விரும்பிப்போய் அழைக்கவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படியானால் திமுகவிலிருந்தும் பாஜகவுக்கு வருவார்கள் என்று நம்புகிறீர்களா?

(சிரிக்கிறார்) திமுகவில் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் பாஜகவைத் தேடி வந்துகொண்டுதானே இருக்கிறார்கள். திமுகவில் பிளவு ஏற்படுமா என்பது காலமும் ஸ்டாலின் அவர்களும் தான் முடிவுசெய்ய வேண்டும். அவர், கட்சிக்குள் ஜனநாயகத்துக்கு இடமளிக்கிறாரா... குடும்ப ஆதிக்கத்துக்கு இடம் கொடுக்கிறாரா என்பதை பொறுத்தே அது உள்ளது.

மேகேதாட்டு விவகாரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கர்நாடகத்தில் கடந்த 5 வருடங்களாக பாஜக ஆட்சிதான் நடைபெற்றது. பிரச்சினைகள் வரும்போது மத்தியில் உள்ள அரசாங்கம் எப்படி சட்டத்தை பின்பற்றி உறுதியாக நின்றது. கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருந்தபோது அமைச்சர்களோ முதல்வரோ இப்படிப் பேசியது கிடையாது. தற்போது காங்கிரஸ் அரசாங்கம் வந்தவுடன் துணை முதல்வர், அணை கட்டுவோம் என வெளிப்படையாக அறிவிக்கிறார்.

பாஜக முதல்வர், அமைச்சர்கள் மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக பேசும்போது கொந்தளித்த தமிழக முதல்வர், தற்போது ஏன் வாய்மூடி மெளனமாக இருக்கிறார் என்பதே கேள்வி. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை சட்டத்தின்படி மத்திய அரசு செயல்படும்.

“திமுகவினர் இரண்டு வீட்டில் இருப்பார்கள்” என்று நீங்கள் பேசிய பேச்சு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறதே?

அந்த பேச்சை நான் தவிர்த்திருக்க வேண்டும். நாகரிகமான, கண்ணியமான பேச்சுகளை முன்வைக்க வேண்டும்; அரசியலுக்குள் பெண்கள் அதிகளவில் வர வேண்டுமென நினைக்கக்கூடிய நான், அந்தக் கூட்டத்தில் அந்த மாதிரியான கருத்துகளை தவிர்த்திருக்கலாம். ஆனால் அதற்காக, திமுக மேடைகளில் அவர்கள் பேசும் அந்த வரம்புமீறிய அநாகரிகமான பேச்சோடு என்னுடைய கருத்தை ஒப்பிட்டுப் பேசுவது அநாகரிகம்.

அவர்கள் எந்த மாதிரியான விமர்சனங்களை பெண்கள் மீதும் பிரதமர் மீதும் வைக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவர்கள் மீது முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார், கண்டித்துள்ளாரா? இல்லையே... அதனால் அவர்களுடன் என்னை ஒப்பிடுவது தவறு.

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவை பாஜகவின் கிளைகளாக செயல்படுவதாகச் சொல்கிறாரே அமைச்சர் உதயநிதி?

அமலாக்கத்துறையானாலும் சரி, வருமான வரித்துறையானாலும் சரி பாஜகவினர் தவறு செய்தாலும் விடுவதில்லை. கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் கூட தெரியாமல் இவர்கள் பேசுகிறார்கள். செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது ஊழல் குற்றச்சாட்டு சொன்னதே நீங்க, அதே நபர் உங்கள் கட்சிக்கு வந்ததும் அவரை அமைச்சராக்கி, காப்பாற்றிக்கொண்டிருக்கிறீர்களே உங்களை என்ன சொல்வது? நீங்கள் என்ன கிளை நடத்துகிறீர்கள் என்று திமுகவை பார்த்துத்தான் கேட்கவேண்டும். ஊழலில் சிக்கிய அமைச்சர்களைக் காப்பாற்றும் பிரிவு நடத்துகிறதா திமுக என உதயநிதியைத்தான் கேட்க வேண்டும்.

பாஜக-வுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஓரணியில் திரளும் முயற்சியில் இறங்கி இருப்பது பாஜக-வுக்கு பங்கம் உண்டாக்குமா?

எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள் ஏற்கெனவே பாஜகவை எதிர்க்கும் கட்சிகள்தான். எனவே, அவர்கள் கூடிப் பேசியதால் பாஜகவுக்கு எந்த நஷ்டமும் ஏற்படப்போவதில்லை. பீகாரில் திமுகவோ, தமிழ்நாட்டில் ராஷ்டிரிய ஜனதா தளமோ போட்டியிட முடியாது. பாட்னா கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேரளத்தில் கூட்டணி வைக்க முடியுமா? முடியாது. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கப்போவதை யாராலும் தடுக்க முடியாது.

திமுக குடும்ப ஆட்சி நடத்துகிறது என்கிறார் மோடி. ஆனால், கருணாநிதி குடும்பம் என்பதே தமிழ்நாடுதான் என்கிறாரே முதல்வர் ஸ்டாலின்?

எல்லாருக்கும் குடும்பம் தமிழ்நாடுதான் அதுவல்ல எங்களின் கேள்வி. ஊழல் குறித்து உங்கள் பதில் என்ன? நாங்கள் ஊழல் செய்யாதவர்கள் என்று இவர்களால் சொல்ல முடியுமா? குடும்ப அரசியல் இல்லை என மறுக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. அதைத்தான் பிரதமர் மோடி அவர்கள் கூறியுள்ளார். அதில் என்ன தவறு இருக்கிறது. பாட்னா கூட்டத்தை பார்த்து யாருக்கு பயம் வந்துவிட்டது என்பது மக்களவைத் தேர்தல் முடிவுகள் சொல்லும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in